"கோ", "விண்ணைத்தாண்டி வருவாயா" வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எல்ரெட் குமார், தங்களது ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்தான் "முப்பொழுதும் உன் கற்பனைகள்". ஐ.டி.கம்பெனி யுவன்-யுவதி அதர்வாவும், அமலாபாலும். ஒரு புதிய சாப்ட்வேர் ப்ராஜக்ட் சம்பந்தமாக பெங்களூரில் ஒரே வீட்டில் தங்கும் இருவருக்குமிடையே கிட்டத்தட்ட காதல். இந்தக்காதல் கசிந்து
உருகவிருக்கும் வேளையில் நாயகிக்கு, நாயகனிடம் கூட சொல்லிக் கொண்டு போக முடியாதபடிக்கு அமெரிக்க செல்ல வேண்டிய சூழல்! தன் அப்பாவுடன் அமெரிக்காவிற்கு சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகிவிடும் அமலாவை, ஐ.டி., பெண்களை போதை படுகுழியில் தள்ளும் வில்லன்கள் தான் போட்டுதள்ளிவிட்டதாக கருதும் அதர்வா, அவர்களை பல்வேறு அவதாரங்கள் எடுத்து பழி தீர்ப்பதுடன், ஒருபக்கம் அமலாபாலுடன் கற்பனை உலகில் வாழவும் செய்கிறார். மற்றொருபக்கம், அமெரிக்க சென்ற அமலா, சில வருடங்கள் கழித்து சென்னை திரும்பியதும் அதர்வாவை மீண்டும் சந்திக்கிறார். அமலா, அதர்வாவின் இயல்பு மீறிய வாழ்க்கையை இயல்பாக்கினாரா? இல்லையா...? என்பது கவிதை நயமும் கற்பனை வளமும் மிக்க மீதிக்கதை!
ஐ.டி., இளைஞனாகவும், ஆக்ரோஷ அவதாரங்களாகவும் அதர்வா அசத்தலாக நடித்திருக்கிறார். அதர்வா செய்யும் பெரிய இடத்து பிள்ளைகளின் கொலையை போலீசும், அவர்களை பெற்றவர்களும் பெரிதாக எடுத்து கொள்ளாதது சுத்த உடான்ஸ்! அமலாவுடனான காதலை நிஜத்திலும், கற்பனையிலும் பிரமாதமாக அதர்வா வெளிப்படுத்தும் இடங்கள் படத்தின் பெரும்பலம்!
அமலாபால், நடிப்பிலும் தான் ஒரு அழகு பெண்பால் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதர்வா மட்டுமே இவர் மீது காதல் வயப்பட்டு கற்பனையில் வாழ்வதாக இவர் காட்டிக்கொள்வதை நம்ப முடியவில்லை. இது படத்தின் பெரியபலவீனம்!
அதர்வாவை ஒருதலையாக காதலிக்கும் யாஷிகா, அமலாவிற்கு அமெரிக்காவில் நிச்சயிக்கப்பட்ட புதுமுக இளைஞன், நாசர், அதர்வாவின் அம்மா அனுபமா, ஜெய்பிரகாஷ், சந்தானம் உள்ளிட்டவர்கள் தங்களது பாத்திரத்தில் பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் கணவனை இழந்து ப்ளாஷ்பேக்கில் அதர்வாவிற்காக மொட்டைத்தலையும், வட்டிகாசுமாக அலையும் அனுபமா பிரமாதம்! அது சரி வேறு ஒருவருக்காக நிச்சயிக்கப்பட்ட ஹீரோயினை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நம் ஹீரோக்கள் காதலித்து கைபிடிப்பார்கள்? என்பதையும், ஹீரோவிற்காக ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் கெட்டவர்களாகவே காண்பிப்பார்கள்? என்பதையும் தெளிவுபடுத்துவது நல்லது! இந்தப்படத்தில் ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை வேறு விதத்தில் நம்ம கலாச்சாரத்திற்கு ஒத்துவராது... என்றாலும் வில்லனாக்கியிருப்பது ஆறுதல்!
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, சக்தியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரமாண்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், எல்ரெட் குமாரின் இயக்கத்தில், அமலா அமெரிக்கா போனதும், அதர்வாவை மறப்பது, அதர்வாவின் பெங்களூர் பிளாட்டிற்கு யார் வாடகை கொடுப்பது உள்ளிட்ட எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" படம் பார்க்கும் ரசிகர்களின் நினைவுகளில் எப்பொழுதும் குழப்பும்!
மற்றபடி "முப்பொழுதும் உன் கற்பனைகள்" - "இப்பொழுதும் எப்பொழுதும் இனிய நிகழ்வுகள்!!"