இன்று (மார்ச் 8-ந் தேதி) சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவமும், முக்கியத்துவமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா கரத் கூறுகையில்;
பெண்களின் முன்னேற்றத்துக்கு எதிராக பல தடைகள் உள்ளன என்றும் அந்த தடைகளை பெண்கள் உடைத்து முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்தார். மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் கூறுகையில்; பெண்களின் நலனுக்காக பேச்சளவில் நின்று விடாமல் அரசாங்கம் செயலில் இறங்க வேண்டும் என்றார்.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போது பாராளுமன்றத்தில் ஏன் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது? என்று கேள்வி எழுப்பிய அவர், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வகை செய்யும் சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றார்.
இந்திய தேசிய பெண்கள் பேரவையின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறுகையில்;
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், பணிபுரியும் இடங்களில் பெண்களின் நிலை மேம்பாடு அடையவும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கவும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் பெண்கள் மேம்பாடு அடைய உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.