வெறும் இன்ஸ்பெக்டராக மட்டுமே இருந்து கொண்டு இண்டர்நேஷனல் டான்-களையும், டன்டனக்கா ஆடச் செய்யும் நேர்மையான போலீஸ் அதிகாரி "மாசி" எனும் ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என செயல்படும் அர்ஜூன், அதனால் குடும்பம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை இழந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல், நேர்மை ஒன்றை குறிக்கோளாக அதிரடி
பண்ணி அக்யூஸ்ட்டுகளை வெளுத்து வாங்குகிறார்.
ஒரு கட்டத்தில் அவரது நேர்மையே அவரது காக்கிசட்டை யூனிபார்முக்கும் உலை வைக்க, அதில் கொதித்தெலும் அர்ஜூன், இண்டர்நேஷனல் தாதா நாகா எனும் பிரதிப் ராவத்தின் போலீஸ் கையாள் போன்று நடித்துக் கொண்டே பாலாசிங், "தூள்" சகுந்தலா, பொன்னம்பலம், சந்தானபாரதி, கோட்டா சீனிவாசராவ், பிரதிப்ராவத் என அரை டஜனுக்கும் மேற்பட்ட போலீஸீலும், வெளியிலும் உள்ள வில்லன்களை போட்டுத்தள்ளுவதுடன் ஹேமா, அர்ச்சனா எனும் இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடுவதும் தான் மாசி படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
வழக்கமான அர்ஜூன் பட பார்முலா கதைதான் என்றாலும், அதை கலக்கலாக எழுதி, இயக்கி இருக்கும் விதத்தில் கவருகிறார் இயக்குநர் ஜி.கிச்சா!
அர்ஜூன் வழக்கம் போலவே, போலீஸ் அதிகாரியாக நம்பமுடியாத அளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார். நாயகிகள் ஹேமா, அர்ச்சனா தலா இரண்டு டூயட் பாடிப்போவதோடு சரி! ஆக்ஷ்ன் படத்தில் அவர்களுக்கு வேறென்ன வேலை...?!
இண்டர்நேஷனல் வில்லன் தாதவாக பிரதிப்ராவத், பொன்னம்பலம், கோட்டா சீனிவாஸராவ், சந்தானபாரதி, கவுதம், பாலாசிங், "தூள்" சகுந்தலா, மயில்சாமி உள்ளிட்டவர்கள் தங்களை பங்கை சரியாக செய்துள்ளனர்! அதிலும் மயில்சாமி - அர்ஜூன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் ஹைலைட்! எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு, தினாவின் இசை இரண்டும் நச்!
மொத்தத்தில் ஜி.கிச்சாவின் இயக்கத்தில், "மாசி" - "மாஸ்-சி(னிமா)!"