கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உறுதி செய்ய போராடி வந்த அருண் விஜய்க்கு சரியான 'பிரேக்' கொடுத்திருக்கிறது தடையறத் தாக்க. இதற்கு அவர் யாருக்கு நன்றி சொல்கிறாரோ இல்லையோ... இயக்குநர் மகிழ் திருமேனிக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஹீரோ, ஹீரோயின் என்று யாருக்கும் முக்கியத்துவம் தராமல், கதைக்கும் நல்ல ஸ்க்ரிப்டுக்கும் அவர் முக்கியத்துவம் தந்திருந்தார். அருண் விஜய்யை அலட்டாமல், டீஸன்டாக நடிக்க வைத்திருந்தார்.
படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் 70 சென்டர்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
அருண் விஜய்யை வைத்து யாரும் படம் பண்ண முன்வராத போது, அவரது மாமனார் டாக்டர் மோகன் முன்வந்து படம் தயாரித்தார்.
அவர் சொன்னது இதுதான்: "எல்லா திறமையும் இருக்கிற அருண் விஜய்யை வைத்து நான் மூன்று படம் தயாரிக்கப் போகிறேன். அந்த மூன்றும் ஓடாவிட்டால் அவர் வேறு தொழில்களைக் கவனிக்கட்டும். ஒரு படம் ஜெயித்தாலும் தொடர்ந்து படங்கள் பண்ணுவேன்," என்றார்.
அந்த வகையில் முதலில் அவர் தயாரித்தது மலை மலை. அந்தப் படம் முதலுக்கு மோசமில்லாமல் 100 நாட்கள் ஓடிவிட்டது. அடுத்த படம் மாஞ்சா வேலு படுத்துவிட்டது.
ஆனால் இந்த மூன்றாவது படம், அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இதுகுறித்து அருண் விஜய் கூறுகையில், "தடையறத் தாக்க படம் மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி உள்பட அனைவருக்கும் நன்றி. எல்லோரும் இந்தப் படத்தில் என்னை பாஸிடிவாக உற்சாகப்படுத்தினார்கள். அதுதான் பெரிய வெற்றிக்கு காரணமானது," என்றார்.