கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன. சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான
பில்லா 2 பாக்ஸ் ஆபீஸில் இரு வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் தற்போது வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்துப் போன இப்படம் மற்றவர்களைக் கவரத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சக்ரி டோலட்டி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அது கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்று கூறப்படுகிறது.
தலைவன் இருக்கின்றான் பட இயக்கம் தொடர்பா சக்ரியுடன் பேச்சு நடந்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனுடன் நல்ல நட்பில் இருப்பதோடு, உன்னைப் போல் ஒருவனை ஹிட் படமாக்கியவர் என்பதாலும் சக்ரிக்கே தலைவன் இருக்கின்றான் படம் கிடைக்கும் என்று தெரிகிறது.
சக்ரி சலங்கை ஒலியில் கமல்ஹாசனை பாடாய்ப்படுத்திய குட்டிப் பையன் என்பது நினைவிருக்கலாம். இப்போது இயக்குநராகியுள்ள இவர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.
மறுபக்கம், தலைவன் இருக்கின்றான் படத்தை கமல்ஹாசனே இயக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை இதுகுறித்து தெளிவு ஏற்படாது என்றே தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு சக்ரியின் பெயர்தான் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.
தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதன் மூலம் தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமலும், ஆஸ்கரும் மீண்டும் இணைகிறார்கள். தலைவன் இருக்கின்றான், ஊழல், கருப்புப் பணம் குறித்த கதை என்பதை கமல்ஹாசனே பூடகமாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.