விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், இப்போது தயாரிப்பில் இருக்கும் "நீதானே என் பொன் வசந்தம்" ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட். இதே நிறுவனம் அடுத்து, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, யான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை ஒருவரிடம் பேசி வருகிறார்கள். நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த ஒருவர் வில்லனாக நடிக்கிறார். இவர் தவிர, பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற இருக்கிறது.