கிரிக்கெச் சூதாட்டம் குறித்து படம் இயக்கப் போகிறார் ரோஸ் வெங்கடேசன். அரவாணி ஒருவர் படத்தை இயக்குவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். அரவாணியான ரோஸின் இயற் பெயர் ரமேஷ் வெங்கடேசன். அரவாணியான பின்னர் இவர் ரோஸ் வெங்கடேசன் ஆனார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் வந்த இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானார். இப்போது சினிமாவுக்கு வந்துள்ளார். ஒரு படத்தில் குத்தாட்டமும் போட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான படத்தை இயக்கப் போகிறாராம் ரோஸ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில், மெக்கானிகல் என்ஜினீயரிங் படித்தேன். பின்னர், அமெரிக்கா சென்று லூசியானா பல்கலைக்கழகத்தில்,பயோ மெடிகல் படித்தேன். அரவாணியாக மாறியபின், என் பெயரை ரோஸ் வெங்கடேசன் என்று மாற்றிக் கொண்டேன்.
ஒரு சினிமா படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்பது, ரொம்ப வருட கனவு. அந்த ஆசை எனக்குள் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கான சந்தர்ப்பம் இப்போது அமைந்து இருக்கிறது.
என் நீண்ட கால நண்பர் செந்தில்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தியாவிலேயே ஒரு சினிமா படத்தை இயக்கும் முதல் அரவாணி, நான்தான்.
படத்துக்கு, கிரிக்கெட் ஸ்கேன்டல் என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கிரிக்கெட் சூதாட்டத்தை கருவாக கொண்ட கதை. படம், ஆங்கிலத்தில் தயாராகிறது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்.
கிரிக்கெட் சூதாட்டத்துடன், திருநங்கைகள் பற்றியும் 30 சதவீத கதை இருக்கிறது. அதில், ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ஆங்கிலம் பேச தெரிந்த-கிரிக்கெட் ஆர்வம் உள்ளவர்களை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறோம். பிரபலமான சில நடிகர்களும் பங்கு பெறுவார்கள்.
படப்பிடிப்பை சென்னையிலும், இலங்கையிலும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார் ரோஸ்.