ஒரு பாலடைந்த தொழிற்சாலையில் தலைகீழாக தொங்க விடப்பட்ட நிலையில் நாயகன் சீனு, தன் வாழ்க்கையின் முற்பகுதியை சொல்வது போல் கதை துவங்குகிறது. சலவைத் தொழில் செய்பவராக சீனு. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வி்ட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க செல்கிறார். அப்பொழுது நாயகி மித்ராவும் விண்ணப்பம் வாங்க கல்லூரிக்கு வருகிறார். மித்ராவை பார்க்கும் சீனு பார்த்தவுடன் காதல் வயப்படகிறார். மித்ராவின் நினைவிலேயே இருக்கும் சீனு அவரது
சலவை துணிகளில் மித்ரா அணிந்த ஆடையை பார்க்கிறார். ஆடையை வைத்து மித்ராவின் வீட்டையும் தெரிந்து கொள்கிறார்.
மித்ரா கல்லூரியில் அவளுடன் படிக்கும் குடும்ப நண்பன் ஷாம் உடன் தனியாக தங்கியிருப்பதை அறிகிறான். சீனு, மித்ரா, ஷாம் மூவரும் கல்லூரியில் ஒரே பாடப்பிரிவில் சேர்கிறார்கள்.
கல்லூரி முடிந்து வீ்ட்டிற்கு செல்லும்போது சீனுவும் உங்களுடன் வருகிறேன் எனக்கூற, வேண்டா விருப்பமாக காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். காரில் செல்லும்போது ஆட்டோ மீது கார் மோதுகிறது.
காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்களை கூட்டி வருகிறார். இதனால் சீனு தான்தான் காரை ஓட்டி வந்தது என்று சொல்லி தர்மஅடி வாங்குகிறார். இதனால் மித்ராவும் ஷாமும் சீனுவிடம் நெருக்கமாக நட்பு கொள்கின்றனர்.
ஷாம் பிறந்த நாளுக்கு மித்ரா வீட்டுக்கு சீனு வருகிறான். அங்கு ஷாமும் சீனுவும் மது அருந்துகிறார்கள். போதையில் சீனு மித்ராவின் அறைக்கு செல்கிறான். அங்கு அவள் குளிப்பதை பார்க்கிறான். இதை ஷாம் பார்த்து விடுகிறான்.
மறுநாள் கல்லூரியில் ஷாம், சீனுவிடையே வாக்குவாதம் நடக்கிறது. அது சண்டையாக மாறுகிறது. இதைக்கண்ட மித்ரா, இருவரும் நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இரண்டு நாள் கெடு கொடுத்துச் செல்கிறாள்.
ஷாமை சமாதானப்படுத்துவதற்காக சீனு அவனது வீட்டுக்குச் செல்கிறான். அங்கு இருவருக்கும் சண்டையாகிவிடுகிறது. சீனு, ஷாமிடம் மித்ராவை நான் மிகவும் காதலிக்கிறேன். இதனால்தான் இந்த கல்லூரியில் சேர்ந்தேன் என்று சொல்லி, எங்களை நீதான் சேர்த்து வைக்க வேண்டும் என கெஞ்சுகிறான்.
ஷாம் இது ஒருநாளும் நடக்காது என சண்டையிடுகிறான். சண்டையில் சீனு, ஷாமை அடித்துக் கொள்கிறான். இது வெளியே தெரியக்கூடாது. தெரிந்தால் மித்ராவை இழக்க நேரிடும் என்பதால் ஷாமின் வீட்டின் படுக்கறையிலேயே பிணத்தை புதைத்து விடுகிறான்.
ஷாம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு மூன்று நாள் ஐந்து நாள் என காணாமல் போய்விடுவான் என்பதால் மித்ரா அவனை தேடவில்லை. நாட்கள் செல்ல செல்ல அவன் திரும்பி வராதது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கிறாள்.
மறுபக்கம் மித்ரா மீது சீனு மிகுந்த பாசம் வைத்திருக்கிறான். இதனால் மித்ரா சீனுவை காதலிப்பதாக அவனிடம் சொல்கிறாள். இதனால் சீனு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். மித்ராவிற்காக எதையும் செய்ய துணிகிறான் சீனு.
ஷாமைத் தேடி அலையும் போலீசார் சீனுவின் மீது சந்தேகம் கொள்கிறார்கள். அவனைக் கண்காணிக்கவும் தொடங்குகிறார்கள். இதையறிந்த சீனு இதிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். ஆனால் போலீசார் பொறி வைத்து சீனுவை கைது செய்கின்றனர்.
அதில் ஒரு உயர் அதிகாரி சீனுவிடம் ஒரு டீலிங்கை வைக்கிறார். நீ உன் காதலியிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கிக்கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறார். சீனுவும் போன் செய்து மித்ராவிடம் பணம் கேட்கிறான். மித்ராவும் ஏன் எதற்கு என கேட்காமால் கேட்ட பணத்தை கொடுத்து விடுகிறார்.
உயர் அதிகாரியிடம் பணத்தை கொடுத்து கொலை வழக்கில் இருந்து தப்பித்தானா? மித்ராவுடன் இணைந்தானா? என்பது மீதிக்கதை.
சீனுவாக வரும் விஷ்வா சலவைத் தொழிலாளியாக வரும்போதும், ஏழை மாணவனாக கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போதும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
மித்ராவாக வரும் தன்வீ ரொம்ப அழகு. கல்லூரியிலும், வீட்டிலும் இவர் போடும் நடை நம்மை கற்பனை உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. தன்வீயின் நண்பராக வருகிறார் இர்பான். கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்.
பல படங்களில் வில்லனாக வலம் வந்த ரவிகாளே இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இறுதியில் அவரே வில்லனாகவும் வருகிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மில்டன். இவரே வசனமும் எழுதியிருக்கிறார். டேனியல் இசையில் ஹரீஷ் ராகவேந்திரா பாடிய ‘ஒரு பார்வையிலே’ பாடலும், கார்த்திக் பாடிய ‘என் காதல் நீதானே’ பாடலும் மனசுக்கு இதமாய் இருக்கின்றன.
‘காதலில் விழுந்தேன்’ படத்தை எடுத்த பி.வி.பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். பரபரப்பான திரைக்கதை, சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ மனசை தொட்டுச் செல்கிறது.