கமல் ஹாலிவுட் படத்தை இயக்கும் செய்தியெல்லாம் ரொம்பப் பழசு. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்த விதம்தான் புதுசு. இந்தப் படம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது, அதன் ஸ்டில்களைப் பார்த்தே பிரமித்துப் போனாராம் ஹாலிவுட் தயாரிப்பாளரான பேரி ஹாஸ்போன். இதுவரை ஹாலிவுட் படங்களில் கூட இதுபோன்ற சுவாரஸ்யமான ஸ்டில்கள் இல்லை என்று சொல்லி, படம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினாராம்.
விவரங்கள் கிடைத்ததும், சென்னைக்கே வந்துவிட்டாராம் ஹாஸ்போன். கமலுடன் நான்கு முறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.
முதலில் தான் மட்டும் பார்த்து ரசித்தாராம். அடுத்து அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ள ஒரு முறை பார்த்தவர், மூன்றாவது முறையும் பார்த்து சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.
அதையெல்லாம் செய்த பிறகு, தன் குடும்பத்தையே சென்னைக்கு அழைத்து வந்து நான்காவது படம் பார்த்திருக்கிறார்.
அதற்குப் பிறகுதான், எனது அடுத்த தயாரிப்பு உங்க டைரக்ஷனில்தான்... இந்தாங்க அட்வான்ஸ் என நீட்டியிருக்கிறார். விஸ்வரூபம் யூனிட் ஆட்கள் எல்லோர் முன்னிலையிலும் இதை அவர் கூற, அத்தனை பேரும் ஆச்சர்யம் - மகிழ்ச்சியுடன் கைத்தட்டினார்களாம்.
அதுமட்டுமல்ல, இந்த காலகட்டத்தில், கமலின் மற்ற படங்கள், அவரது மெனக்கெடல், சினிமாவுக்கான அவரது அர்ப்பணிப்பு குறித்தெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறார். 'நாம சரியான ஆளைத்தான் பிடிச்சிருக்கோம்,' என்ற திருப்தி அவருக்கு வந்த பிறகே, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஹாஸ்போன்!
உலகின் மிகப் பெரிய சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவராகப் பார்க்கப்படுவர் பேரி ஆஸ்போன் என்பது குறிப்பிடத்தக்கது.