எஸ்.எஸ் மியூசிக் தொகுப்பாளராக இருந்த பூஜாவிற்கு இளம் ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். சின்னத்திரையில் இருந்த போதே காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கூடவே நல்ல பெயரும் கிடைத்தது. சினிமாவை விட சின்னத்திரையே மேல் என்று நினைத்த பூஜா இப்போது விஜய் டிவியில் காஞ்சனா சீரியல் மூலம் களம் இறங்கியிருக்கிறார். தனது சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் பூஜா.
அம்மா, அப்பா பெங்களூர்ல இருக்காங்க. நானும், தங்கை ஆர்த்தியும் படிக்கவும், வேலை பார்க்கவும் சென்னை வந்தோம். எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்த்த போதே எனக்கு திருமணம் ஆயிருச்சு. என்னோட கணவர் க்ரேக் அவரும் எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்க்கிறார்.
நான் எஸ்.எஸ்.மியூசிக்கில் வேலை பார்த்தபோதே சினிமாவிலும், சீரியலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு காரணம் எனக்கு சினிமா மேல் இருந்த பயம்தான். காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குநர் பாலாஜி மோகன் என்னிடம் வந்து கதை சொன்னதும், கதை பிடித்து போய் ஓ.கே., சொல்லிவிட்டேன். ஏனென்றால் படம் முழுக்க காமெடி சப்ஜெக்ட். படத்தில் என்னுடைய கேரக்டர் பிடிச்சது, அதனால் இந்தபடத்தில் நடிச்சேன். படம் பார்த்து நிறைய பேர் பாராட்டுனாங்க. சித்தார்த்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.
எஸ்.எஸ். மியூசிக்கில் இருந்து விலகி ஒருவருடம் ஆகிவிட்டது. திடீர்னு ஒருநாள் காஞ்சனா சீரியல் கதை கேட்டேன். த்ரில்லிங் கதைக்காகவே நடிக்க ஒத்துக்கொண்டேன். இப்பதான் அதோட கஷ்டம் தெரியுது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலை 2 அல்லது 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனா சீரியலுக்காக 15 மணிநேரம் கூட வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. தென்காசி, குற்றாலம்னு காடுமேடெல்லாம் சுத்த வேண்டியிருக்கு. இப்பல்லாம் சின்னப்பசங்க என்னைப்பார்த்து காஞ்சனா பேய்னு பயப்படுறாங்க என்று குஷியாக சொல்லிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் பூஜா.