நயன்தாரா நடிக்கும் ‘ராஜாராணி' படத்தில் கலாச்சார சீரழிவுக்கு துணைபோகும் கதையமைப்பு உள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி அமைப்பு. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: ‘ராஜாராணி' படத்தில் ஒருவர் மனைவியை இன்னொருவர் மணப்பது போல் காட்சிகள் உள்ளன. ஜெய் நயன்தாராவைக் காதலிக்கிறார். ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புகிறார்.
ஆனால் சூழ்நிலை ஜெய் காதலியான நயன்தாராவை ஆர்யாவுக்கு மனைவியாக்குகிறது. ஆர்யா காதலியை ஜெய் மணந்து கொள்கிறார்.
திருமணத்துக்கு பிறகு உண்மை தெரிந்து இருவரும் காதலிகளை பண்டமாற்று முறையில் மாற்றிக் கொள்வது போல் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொருத்தனை காதலித்து இருந்தாலும் தாலி கட்டியவனை கணவனாக ஏற்பதுதான் மரபு.
இயக்குனர் பாக்யராஜ் ‘அந்த 7 நாட்கள்' படத்தில் இதைதான் பதிவு செய்து இருந்தார். ஆனால் ‘ராஜாராணி' படத்தில் மனைவிகளை காதலர்கள் மாற்றிக் கொள்வது பண்பாட்டுக்கு விரோதமானது. ‘ரமணா' படம் மூலம் சமூக அவலங்களை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ் ‘ராஜாராணி' படத்தை தயாரிப்பது முறையில்லை. இதை கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.