தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கமல் ஹாஸனின் புதிய படம் இந்த விஸ்வரூபம். சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி ஹோராவாக நடித்துள்ள படம். ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்கா என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரூ 95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என அடிக்கடி கமல் கூறி வருகிறார். உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம் பற்றிய கதை இது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.
வரும் ஜனவரி 11-ம் உலகமெங்கும் தமிழில் வெளியாகிறது. அதற்கும் 10 மணி நேரங்கள் முன்பு, இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச் எனும் வீட்டுக்கு வீடு உள்ள ஹோம் தியேட்டர்கள் அல்லது டிஷ் ஆன்டெனா கனெக்ஷன் வைத்திருப்போர் வீடுகளில் வெளியாகிறது. கட்டணம் தமிழில் ஒரு கனெக்ஷனுக்கு ரூ 1000. தெலுங்கு மற்றும் இந்திக்கு ரூ 500. விஸ்வரூபம் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் தியேட்டர்களில் வெளியாவது தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. கமலின் டிடிஎச் முயற்சிக்கு தமிழ் சினிமாவின் பெரும்பான்மை அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இவற்றைவிட முக்கியமான அமைப்புகள் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள். இவர்கள்தான் எதிர்ப்பவர்கள். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவே இரண்டுபட்டு நிற்கிறது. வரும் 3-ம் தேதி விஷயம் முடிவுக்கு வந்துவிடும். டிடிஎச் வெளியீட்டில் இந்தப் படம் வென்றால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் தியேட்டர்களை நம்பி வாழும் நிலை மாறிவிடும். அதே நேரம் இருக்கிற தியேட்டர்களின் நிலை உண்மையிலேயே கவலைக்கிடமாகிவிடும் என்பதும் உண்மையே.