விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருக்கிறார்கள், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய தலைவர்களால் உருவான பிரச்சனை இன்று வேறு வழியில் பயணிக்கிறது. இஸ்லாமிய தலைவர்களைவிட தமிழக அரசு விஸ்வரூபத்தை தடை செய்ய அதிக முனைப்பு காட்டுவது நடுநிலையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியானால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்
என்று கூறி படம் வெளியாவதற்கு சரியாக ஒருநாள் முன்பு இரண்டுவார கால தடையை தமிழக அரசு அறிவித்தது. மேலும் 31 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு கலெக்டர்களால் பிறப்பிக்கப்பட்டது. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற ஒரு படத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிக்கும் போது அவர்களின் அதிருப்தி நாட்டில் வன்முறையை தோற்றுவிக்கும் என அரசு கருதினால் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றிருக்கலாம். சட்டத்துக்கு உள்பட்டு ஒரு படம் வெளியாகும் போது அதனை தடுப்பது தவறு, சட்டப்படி படத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரி என அதிருப்தியாளர்களை அறிவுறுத்தியிருக்கலாம். அதை விடுத்து படத்தை தடை செய்ததுதான் விஸ்வரூபம் இத்தனை பிரச்சனைகளை சந்திக்க காரணமாக நடுநிலையாளர்களால் கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாடான மலேசியாவின் கடுமையான தணிக்கைகை;குப் பிறகு படத்தில் தவறான கருத்து ஏதுமில்லை என படம் திரையிட அனுமதிக்கப்பட்டது. எவ்வித பிரச்சனைகளும் இன்றி படம் ஓடியது. குவைத்திலும் அப்படியே, அண்டை மாநிலங்களிலும் அப்படியே. தமிழக அரசின் தடை காரணமாகவே வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. முஸ்லீம்கள் தமிழகத்தைவிட அதிகம் வசிக்கும் கேரளாவில் விஸ்வரூபம் எவ்வித பிரச்சனையுமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இந்தப் படத்தில் எந்த இஸ்லாமியரையும் தவறாக சித்தரிக்கவில்லை என்ற எச்சரிக்கை வாசகத்துடன் படத்தை அவ்வரசு அனுமதித்து படம் அங்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யுகே, யுஎஸ் போன்ற நாடுகளிலும் பிரச்சனையில்லை.
உலகின் எந்த மூலையிலும் வன்முறையை சந்திக்காத ஒரு படம் தமிழகத்தில் ரத்த ஆறை உண்டாக்கும் என்ற பதைப்பில் அரசு படத்தை தடை செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கை தமிழகத்தில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது வெளிப்படை. நீதிபதி படத்தை வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பு அமுலுக்கு வருவதை காலை 10.30 மணிவரை ஒத்தி வைக்க முடியுமா என அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைக்கிறார். காலையில் மேல்முறையீடு செய்து படம் வெளியாவதை மேலும் தடுப்பதற்காக இந்த அவகாசத்தை கேட்கிறார். நீதிபதி மறுக்க, தீர்ப்புக்குப் பின் நள்ளிரவு 11.30 மணிக்கு அவசர அவசரமாக தலைமை நீதிபதியை சந்தித்து படத்துக்கு தடைகோரி மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெறுகிறார்கள்.
அரசின் அச்சம் என்பது இந்த படத்தை வெளியிட்டால் வன்முறை நடந்துவிடுமோ என்பது. இதனை காரணம் காட்டியே படத்தை தடை செய்ததாக தெரிவித்திருக்கிறார்கள். முஸ்லீம் நாடுகளிலும், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களிலும் எவ்வித பிரச்சனையும் இன்றி படம் ஓடுகிறது. நீதிபதியின் தீர்ப்பும் படத்துக்கு சாதகமாகவே வந்துள்ளது. எனில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? படத்தை வெளியிடுவதற்கான முழு ஒத்துழைப்பை தந்திருக்க வேண்டும். மாறாக எப்படியாவது படத்தை தடை செய்ய வேண்டும், படம் சம்பந்தப்பட்டவர்களை நஷ்டப்படுத்த வேண்டும் என்ற தீவிரத்துடன் செயல்படுவதான சந்தேகத்தையே அவர்களின் மேல்முறையீட்டுக்கான முனைப்பு காட்டுகிறது என்பது பெருவாரியான பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இந்த தடையானது சேட்டிலைட் உரிமைக்கான நிழல் யுத்தம் என தெரிவித்திருக்கிறார். விஸ்வரூபத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா தொலைக்காட்சி முதலில் வாங்கியதாகவும் பிறகு அது விஜய் தொலைக்காட்சிக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது. அரசின் தடை முயற்சியையும் இதனையும் முடிச்சிட்டு பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.
அரசு வன்முறை ஏற்படும் என்று தொடர்ந்து சொல்கிறது. அப்படியானால் யாரால் வன்முறை ஏற்படும்? நிச்சயமாக படத்தை வெளியிட வேண்டும் என்று கூறுகிறவர்களால் வன்முறை ஏற்பட வாய்ப்பில்லை. படத்தை தடை செய்த போதுகூட அவர்கள் எவ்வித பிரச்சனையிலும் இறங்காமல் சட்ட ரீதியாகவே பிரச்சனையை அணுகினர். எனில் படத்தை தடை செய்ய கோருகிறவர்களால் வன்முறை ஏற்படும் என்கிறதா அரசு? சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு படத்துக்கு எதிராக யார் வன்முறையில் இறங்கினாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி படத்துக்கும், படம் பார்ப்பவர்களுக்கும், திரையரங்குகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் முறையானதாக இருக்கும், அதுவே அரசின் கடமை. படத்துக்கு தடைவாங்குவதில் காட்டும் முனைப்பில் ஒரு சதவீதத்தை படம் வெளியாகி பிரச்சனைகளின்றி ஓடுவதில் அரசு காட்டினாலே மொத்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிடும். இதுவே நடுநிலையாளர்களின் வாதமாக உள்ளது.