டேவிட் சினிமா விமர்சனம் | David Movie Review



விக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் "டேவிட்" திரைப்படமும் "நீர்ப்பறவை", "கடல்" படங்களைப்போன்று கிறிஸ்தவ பிரச்சார படமாகவே காட்சியளிக்கிறது. என்ன முன் இரண்டு படங்களும் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து கதையை உள்ளடக்கி வெளிவந்தன. இது (டேவிட்) நகரத்து கிறிஸ்தவம் பேசும்படமாக வெளிவந்திருக்கிறது!


2010-ம் ஆண்டில் கோவா கடற்கரையில் சதா சர்வகாலமும் குடியும் கும்மாளமுமாக வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்‌டாக்களும், 1999-ம் ஆண்டில் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் ‌எனும் ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் "டேவிட்" படம் மொத்தமும்! அந்த டேவிட்டுக்கும், இந்த டேவிட்டுக்கும் க்ளைமாக்ஸில் ஏற்படும் ரிலேஷன்ஷிப் தான் டேவிட் படத்தின் டுவிஸ்ட், ஹைலைட், இத்யாதி, இத்யாதி... ‌என எண்ணிக்கொண்டு மொத்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார் படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான பிஜேய் நம்பியார். இருவேறு டேவிட்டுகளின் வாழ்க்கையை இருவேறு கோணத்திலிருந்தும் ஒரு நாவல் மாதிரி சொல்ல வேண்டிய இயக்குனர், பல இடங்களில் அதை நழுவலாக சொல்லி ரசிகர்களை போரடித்திருப்பது தான் "டேவிட்" படத்தின் பலவீனம்!

படத்தின் ஒரு டேவிட் விக்ரம், என்னதான் கோவாவின் சீதோஷண நிலைக்கு மது சரிபட்டு வருமென்றாலும், விதவிதமான பாட்டில்களில் ரகம் ரகமான மது வகைகளை ராவா சாப்பிடுவது, அதுவும் உடம்பில் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளித்து வைத்து சாப்பிடுவது கொஞ்சம் அல்ல நிறையவே ஓவராகத் தெரிகிறது! "காசி, "தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களின் கதைகளை ஓப்புக் கொண்டு நடித்த விக்ரமா இந்த டேவிட் கதையையும், அதுவும் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை டாவடிக்கும் கேரக்டரை கேட்டு நடித்தார்...?! என கேட்கத் தோன்றுகிறது. முந்தைய படங்களை காட்டிலும் இளமையாகத் தெரியும் விக்ரம் ‌ஒரே ஆறுத‌ல்!

மற்றொரு டேவிட்டாக மும்பை இளைஞராக கையில் கிட்டாரும், தலையில் வித்தியாசமான சடை பின்னலுமாக வரும் ஜீவா, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். பாதிரியார் அப்பா நாசருடன் மல்லுக்கு நிற்பதிலும் சரி, அவரை மதவாதி என மானபங்கபடுத்திய அரசியல் பிரமுகர்களுடன் மல்லுகட்டுவதிலும் சரி ஜீவா வித்தியாசமாக நடித்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். தன் லட்சியங்கள், கனவுகள் முரட்டுதனம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு க்ளைமாக்ஸில் ஜீவா தன் அப்பா நாசர் மாதிரியே பாதிரியார் ஆகிவிடுவது செம ட்விஸ்ட், அதேநேரம் என்னதான் மும்பை இளைஞர் என்றாலும் ‌ஏர்ஹோஸ்டஸ் சிஸ்டருடன் சேர்ந்து திருட்டு தம் அடிப்பது, அந்த சிஸ்டரும், ஜீவாவுக்கு அக்காவா..? சொக்காவா...? என்பது புரியாமல் தெரியாமல் ஒருவித போதை பர்ஸ்னாலிட்டியுடனேயே சுற்றி வருவது உள்ளிட்டவைகளை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

ஜீவாவின் அப்பாவாக பாதிரியராக வரும் நாசர், விக்ரமின் நண்பர் பீட்டர், விக்ரமின் வித்தியாசமான தோழி தபு, விக்ரமின் ஒருதலைக்காதலி ரொமாவாக வரும் இஷா சர்வானி, பெண் அரசியல் தலைவராக வரும் ரோகிணி உள்ளிட்டவர்களும் விக்ரம், ஜீவா மாதிரியே படத்திற்காக பெரிதும் உழைத்திருக்கின்றனர். ஒன்றாகவே நடித்திருக்கின்றனர்.

அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது. ரத்னவேலு, பி.எஸ்.வினோத் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்.!

விக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்!

ஆகமொத்தத்தில், "டேவிட்" திரைப்படத்தை அந்த இருபெரும் நடிகர்களின் ரசிகர்களும் டூவிட்டு விடாமல் பார்த்தால் சரி! "டேவிட் - டவுட்!!"
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget