கடல் சினிமா விமர்சனம் | Kadal Movie Review


நடிகர்: அர்ஜூன், அரவிந்த்சாமி, கெளதம் கார்த்திக்  நடிகை : துளசி நாயர்
இசை: ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம்: மணிரத்னம்
எல்லா கலைஞர்களுக்குமே ஒரு தேக்க நிலை வரும். போகும்... சினிமாவில் அது சகஜம்தான்.
ஆனால் இந்த நிலை மணிரத்னத்துக்கு உயிரே-யிலிருந்து தொடர்கிறது... கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாய்!
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து சிறந்த படம் எடுக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினால், முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டியது அந்த மக்களின் வாழ்க்கை முறையை. அந்த மண்ணையும் மண்சார்ந்த கலாச்சாரத்தையும் உணர்ந்தறிதல் அவசியம்.
ஆனால் மணிரத்னம் ஏதோ கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு தன் பாணியில் கிராமங்களைக் காட்டுவார். குஜராத்தில் கதை நடக்கும். கதை மாந்தர்கள் திருநெல்வேலித் தமிழ் பேசுவார்கள். விளைவு.. அவர் ஆகச் சிறப்பாக காட்சியமைத்தாலும் அது பார்வையாளனுக்குள் கிண்டல் அலைகளையே கிளப்பிவிடும்.
அவரது சமீபத்திய வெளியீடான கடல் படமும் இதற்கு விலக்கில்லை. முந்தைய படங்களிலாவது ஏதாவது ஒரு பகுதியில் உணர்வுப் பூர்வமான காட்சிகள் ஒன்றிரண்டு மனதை நிரடும். ஆனால் கடல்புர மாந்தர்களை உள்ளடக்கிய இந்த கடலில் ஒரு காட்சி, கதாபாத்திரம் கூட மனதில் பதியவில்லை என்ற உண்மையை சொல்லியே தீர வேண்டும்.
சாத்தான் அர்ஜூனுக்கும், தேவதூதன் அர்விந்த் சாமிக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்ற ஒற்றை வரிக் கதை.
கிறிஸ்தவ ஊழியப் பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் அங்கு அர்ஜூன் செய்யும் தகாத சமாச்சாரத்தைப் போட்டுக் கொடுத்துவிடுகிறார் அரவிந்த்சாமி. எனவே அர்ஜுன் வெளியேற்றப்படுகிறார். மனதில் அரவிந்த்சாமியுடனான விரோதத்துடன், தவறான வழியில் போய் பெரிய தாதாவாகிவிடுகிறார் அர்ஜூன்.
ஒரு கட்டத்தில் திட்டமிட்டு அரவிந்த்சாமியை ஜெயிலில் தள்ளுகிறார்.
இடையில் முறைதவறிய உறவால் பிறந்து, ஆதரவற்று வாழ்ந்து, பாதிரியார் அரவிந்த் சாமியால் நல்வழிப்படுத்தப்படுகிறார் கவுதம். பாதிரியார் சிறைக்குப் போனதும், அத்தனை நாள் நல்லவனாக வளர்ந்த கவுதம், 'சாத்தான்' அர்ஜூனின் கையாளாக மாறுகிறார். வெளியில் வரும் பாதிரியார் கவுதமை மீண்டும் நல்வழிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் மனதால் குழந்தையாக, உருவத்தில் குமரியாக உலா வரும் துளசியின் காதல்தான் கவுதமைத் திருத்துகிறது. அர்ஜுனின் மகள்தான் இந்த துளசி. அது இன்னொரு 'தகாத உறவுக் கதை'!
கவுதம் நல்லவனாக மாறியதை சாத்தானுக்குக் கிடைத்த தோல்வியாக நினைக்கிறார் அர்ஜூன். பாதிரியுடன் மோதல் தொடர்கிறது. எப்பேர்ப்பட்ட பாவத்தையும் செய்யக் கூடியவன் சாத்தான் என்பதை நிரூபிக்க, பெற்ற மகளையே கொல்ல முயல்கிறார் அர்ஜூன். உடன் பாதிரியாரையும் கொல்வதற்காக இருவரையும் கப்பலில் ஏற்றி நடுக்கடலுக்குப் போகிறார். அவர்களைத் தேடி படகில் போகிறார் கவுதம். கடலில் பெரும் சண்டை. ஜெயித்தது சாத்தானா, தேவ தூதனா.. என்பது க்ளைமாக்ஸ்.
அப்பாடா.. ஒருவழியா மணிரத்னமும் ஜெயமோகனும் சொல்ல நினைத்த கதையை ஒரு கோர்வையா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்!
இந்தப் படத்தின் ப்ளஸ்களை முதலிலேயே சொல்லிவிடுகிறோம். முதலிடத்தில் இருப்பது ராஜீவ் மேனனின் அபார ஒளிப்பதிவு. அதே நேரம் படம் முழுக்க ஏதோ ஒரு ஆங்கில நாடகம் பார்ப்பது போன்ற எஃபெக்ட் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை போலும்.
அடுத்து அர்ஜூனின் நடிப்பு. வில்லனாக அவதாரமெடுத்தாலே தனி சுதந்திரம் வந்துவிடுகிறது போலும்... அவரது கெட்டப்பும் கூட நன்றாகத்தான் உள்ளது.
மூன்றாவது ஏ ஆர் ரஹ்மானின் இரு பாடல்கள். நெஞ்சுக்குள்ளே, மூங்கில் தோட்டம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால் ஈர்க்கின்றன. பின்னணி இசைக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்று தெரிந்து அமைதியாகிவிட்டிருக்கிறது இசைப் புயல்!
இந்த மூன்றைத் தவிர... மற்றதெல்லாம் இந்தப் படத்துக்கு மைனஸ்தான்!
ஹீரோ என்று சொல்லப்பட்டாலும், ஒரு துணை நடிகருக்கும் கூடுதலான அந்தஸ்துடன்தான் கார்த்திக் மகன் கவுதமை அறிமுகப்படுத்தியுள்ளார் மணிரத்னம். மீனவக் கிராமத்துப் பையன் என்ற எந்த அடையாளமும் இல்லாத முகம், உடல்மொழி. வசன உச்சரிப்பில் அவரும் கஷ்டப்பட்டு, நம்மையும் கஷ்டப்படுத்துகிறார். அடுத்த படம் கைகொடுக்க வாழ்த்துவோம்!
ராதா மகளும் அப்படியே. அவரது கதாபாத்திரம் மகா குழப்பமானது. அதிலும் துளசிக்கு வந்துள்ள நோய்க்கான காரணம் என ஒன்றைச் சொல்கிறார்களே... அது படத்தில் காமெடி இல்லை என்ற குறையைத் தீர்த்துவிட்டது.
கதை வசனம் ஜெயமோகனாம். காலில் கல்லைக் கட்டிக் கொண்டு மணிரத்னத்தையும் இறுகத் தழுவியபடி கடலில் குதித்திருக்கிறார். அல்லது மணிரத்னம் ஜெயமோகனைக் கட்டிக் கொண்டு குதித்ததாகக் கூட வைத்துக் கொள்ளலாம்... எப்படி மீள முடியும்!
படம் முழுக்க யாராவது ஒரு முக்கிய பாத்திரம் தகாத உறவில் ஈடுபடுகிறது. படம் நெடுக ஆபாச திட்டுகள் நம் முகத்தில் வந்து விழுகின்றன. மீனவர்கள் நாகரீக சமூகத்தில் சேரவில்லை என்கிறாரோ மணிரத்னம்?
இதைக் கூட மன்னிக்கலாம்... ஆனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதே கடத்தலுக்காகத்தான்... அவர்களை கொன்று மூட்டையாகக் கட்டி நடுக்கடலில் வீசுவதே தமிழக தாதாக்கள்தான் என்பது போல காட்சிகளையும வசனங்களையும் வைத்திருக்கிறாரே மணிரத்னம்... அதை எப்படி மன்னிக்கப் போகிறார்களோ!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget