குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு
சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.
குடும்பப் பெண்கள் பலரும், உணவு வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் இருப்பதும், டிவி பார்த்துக் கொண்டு நொறுக்குத் தீனி சாப்பிடுவதும், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் என்று சொல்லி 2 அல்லது 3 மணி நேரங்கள் தூங்குவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாக இருக்கிறது. எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம்.
முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும்.