சாப்பிட்டு முடிச்சதும் தம் அடிக்கிற ஆளா நீங்கள்? அல்லது உடனே ஒரு வாழைப் பழம் உரிக்கிற ஆளா? ஹலோ! உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை!
'சாப்பிட்டு முடிச்சாச்சு. ஒரு சிகரெட்டைப் பத்தவெச்சா சுகமா இருக்கும்’ என்பது புகை பிடிப்போர் பலரின் நம்பிக்கை. ஆனால், அது ஆபத்தாம்!
சிகரெட் பிடிப்பதே உடல் நலத்துக்குத் தீங்கானதுதான் சாமி. அதிலும் சாப்பிட்டவுடன் பிடிக்கப்படும் ஒரு சிகரெட், பத்து எமனுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கேன்சர் வரும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டாம். எனவே, நோ ஸ்மோக்கிங் ப்ளீஸ்!
நல்ல விருந்துச் சாப்பாடு என்றால், வாழைப் பழம் சாப்பிட்டு முடிக்கிற பழக்கம் நம்ம வழக்கம். ஜீரணத்துக்கு நல்லது என்று நினைப்பு. ஆனால், இதுவும் தவறாம். பழங்களுக்கும் நாம் தினமும் உண்ணும் உணவுக்கும் இருக்கும் குணங் கள் வேறுவேறு. இதனால் இரண்டும் சேர்த்து ஜீரணம் ஆவதற்கு இன்னும் தாமதமாகும். அதனால், சாப்பிட்டு முடித்து இரண்டு மூன்று மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதே நல்லது.
சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அமிலத்தின் அளவு டீ இலையில் அதிகம் உள்ளது. அது நாம் உண்ணும் உணவில் உள்ள புரோட்டினை இன்னும் கடினமாக்கி, ஜீரணமாவதை மேலும் தாமதப்படுத்துமாம்.
வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மூச்சுவிட முடியாமல் வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் பெல்ட்டையோ, அல்லது இடுப்புப் பகுதி ட்ரெஸ்ஸையோ லூசாக்கிவிட்டு ஃப்ரீயாக இருப்பார்கள் சிலர். அது கூடவே கூடாதாம். அப்படிச் செய்யும்போது வயிற்றில் மொத்தமாகத் தங்கியிருக்கும் உணவு, பெல்ட் லூஸானதும் தடக்கென்று குடலில் கீழிறங்கி, உள்ளே களேபர மாற்றங்கள் நிகழுமாம். அதனால் குடல் பாதிக்கப்பட்டு பல பிரச்னைகள் வரும்.
சாப்பிட்ட வேகத்தில் பண்ணக் கூடாத இன்னொன்று குளியல்.ஏனென்றால், குளிக்கும்போது தண்ணீரினால் கிடைக்கும் குளிர்ச்சியினாலும், கை, கால் என மசாஜ் போலத் தேய்ப்பதாலும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து ஜீரணத்தைத் தாமதமாக்கும்.
வாக்கிங் செல்வது மிக நல்லது. ஆனால், சாப்பிட்டவுடன் வாக்கிங் கிளம்புவது நல்லதல்ல. உணவுக்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே நடக்க வேண்டும். சாப்பிட்ட வேகத்தில் கடினமான வேலைகளை அரக்கப்பறக்கச் செய்வதும் கூடாது. உணவுக்குப் பிறகு சற்றேனும் ஓய்வு முக்கியம்.
சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதும் தவறு. உடனடியாகத் தூங்குவதால், நாம் உண்ட உணவு ஜீரணமாகாமல் அப்படியே தங்கி குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
இந்த ஏழு கட்டளைகளையும் ஏத்துக்கிட்டீங்கன்னா, உணவே மருந்துங்ணா... அப்பதான் அது உடம்புக்கு நல்லதுங்ணா!