`போஸ்ட் இட்’ என்று அழைக்கப்படும் தகவல் எழுதி ஒட்டும் வண்ணத்தாள்கள் 3எம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தால் முதலில் உருவாக்கப்பட்டு, இன்று உலகெங்கும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த நிறுவனம், புதுவித பசையைக் கண்டறியும் முயற்சியில் இருந்தது. ஸ்பென்ஸ் சில்வர் என்ற வேதியியல் அறிஞர் அதற்கான ஆய்வைச் செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு விளையாட்டுக்காரர். கன்னாபின்னாவென்று வேதிப்பொருட்களைக் கலந்து, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பார். அப்படியொரு நாள் செய்துகொண்டிருந்தபோது ஒருவிதப் பசை கிடைத்தது.
அந்தப் பசையைக் கொண்டு ஒரே ஒருமுறைதான் ஒட்ட முடிந்தது. பிய்த்துவிட்டு, மறுபடி ஒட்டினால் ஒட்டவில்லை. அவர் உருவாக்க விரும்பியதோ, நிரந்தரமாக ஒட்டும் பசை. ஸ்பென்ஸ் சில்வரின் நிறுவனத்தில் யாரும் அந்தப் பசையைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர் மனம் தளரவில்லை. இந்தப் பசையும் ஏதாவது ஒருவிதத்தில் உதவும் என்று நம்பினார். மேலும் பத்தாண்டுகள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
1974-ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை. சில்வருடன் பணியாற்றும் ஆர்தர் பிரை என்பவர் சர்ச்சுக்குச் சென்றார். அங்கே அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பக்திப் பாடல் புத்தகத்தின் `புக்மார்க்’ அடிக்கடி கீழே விழுந்துகொண்டிருந்தது. அதனால் ஆர்தர் பாடல் வரிகளைத் தவறவிட நேர்ந்தது. அப்போது அவருக்குள் ஒரு பொறி தட்டியது.
சில்வர் கண்டுபிடித்த தற்காலிகப் பசை இருந்தால் `புக்மார்க்’ போன்றவற்றைத் தேவையானபோது ஒட்டி, தேவையில்லாதபோது எடுத்துவிடலாமே!
இன்று கோடிக்கணக்கானோர் தங்கள் வீடுகளில், அலுவலகங்களில் `போஸ்ட் இட்’ நோட்ஸ் பயன்படுத்துகின்றனர். வண்ண சிலிப்பில் எழுதி, இன்னொரு காகிதத்தின் மீதோ, போனுக்கு அருகிலோ, பிரிட்ஜ் மேலோ, கதவிலோ ஒட்டிவிடலாம். பசையைத் தேட வேண்டியதில்லை!