உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்ப்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை, அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும். அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் வெண்ணையைக் கத்தி வெட்டுவது போல வெட்டிவிடும்.