காதல், கல்யாணம் இத்யாதி, இத்யாதிகளால் கிராமங்களில் இருந்து உத்தியோக நிமித்தமாக நகரத்திற்கு வரும் வாலிபர்களில், ஒரு சிலர் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் அல்லவா...?! அதை பெரிய குறையாக்கி, கதையாக்கி, படமாக்கி இருக்கிறார்கள் புதுமுக இயக்குநர்கள் எஸ்.ஜி.அலிகான் - எம்.கவுரி சங்கர் (இரட்டை இயக்குநர்கள்) இருவரும்!
கோரமான முகத்தை பார்த்தால் அந்த ஸ்பாட்டிலேயே மயங்கி விழுந்துவிடும் கதாநாயகி மதுஸ்ரீ, பெரிய கோடீஸ்வரி! ஒரு ஹாபிக்காக வங்கி ஒன்றில் பெரிய வேலை பார்க்கும் அவரை, கிராமத்தில் இருந்து அதே வங்கிக்கு வேலைக்கு வரும் ஏழை கதாநாயகர் தமிழ் காதலிக்கிறார். மதுஸ்ரீயும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்நிலையில் மாமியாரை பார்க்க கிராமத்திற்கு போகும் மதுஸ்ரீக்கு, மாமியாரின் முகத்தை பார்த்ததும் மயக்கம் வருகிறது. அதன்பிறகு இவர்களது காதல் என்ன ஆனது?! என்பது தான் "வழிவிடு கண்ணே வழிவிடு" படத்தின் மீதிக்கதை! இதில் க்ளைமாக்ஸில் கதாநாயகி மதுஸ்ரீயின் முகமும் கோரமாவதை யூகிக்க முடிவது பெரிய பலவீனம்!
கதாநாயகன் தமிழ், கதாநாயகி மதுஸ்ரீ, நாட்டாமை பூவிலங்கு மோகன், அம்மா "ஆடுகளம்" மேரி, சார்லி, பாண்டு, "காதல்" சுகுமார் என எல்லோரும் தேவைக்கு அதிகமாகவே நடித்து ரசிகர்களை தேவை இல்லாமல் சங்கடப்படுத்துகின்றனர் என்றால், இசையமைப்பாளர் ஆதிஷ் உத்திரியன், ஒளிப்பதிவாளர் ஜி.கனகராஜ், இரட்டை இயக்குநர்கள் அலிகான்-கவுரி சங்கர் உள்ளிட்டவர்கள் தேவையான அளவிற்கு செயல்படாமல், திரையரங்கில் இருந்து "வழிவிடு கண்ணே வழிவிடு" என்று ரசிகர்களை தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடவிடுகின்றனர்! பாவம்!!