
ஆண்டு் வருமானம் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் உடையவர்களுக்கு மட்டும் இனி கார் கடன் வழங்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கடந்த ஆண்டு கார் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பை அதிரடியாக குறைத்தது.
கார் கடனுக்கு குறைந்தபட்ச தகுதியாக மாத வருமானம் 8,300 ரூபாயும், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தாலே போதுமானது என்று அறிவித்தது.
மேலும், ஒரு லட்சம் கார் கடனுக்கு மாதத்தவணையாக ரூ.1,765 செலுத்தினால் போதும் என்று வாடிக்கையாளர்களை வசியம் செய்து கார் கடன்களை வாரி வழங்கியது. இதனால், கார் கடன் வழங்கும் பிற வங்கிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கார் கடனுக்கான குறைந்தபட்ச வருவாய் தகுதி வரம்பை எஸ்பிஐ தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. மாதத்திற்கு 21,000 ரூபாய் வருவாயும், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருவாய் இருந்தால் மட்டுமே இனி கார் கடன் என்று அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச வருவாய் தகுதியுடன் வழங்கப்பட்ட கார் கடன்கள் சரியாக திரும்ப வசூலாகாததால் இந்த முடிவை எஸ்பிஐ எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும், கார் கடன்களுக்கான வட்டி வீதம் அடிக்கடி அதிகரிக்கப்பட்டதும் மாதத் தவணையில் கூடுதல் சுமையை ஏற்படுவத்தி வருவதாலும் இந்த முடிவை எஸ்பிஐ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்பிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கடந்த 6 மாதங்களில் கார் கடன் மார்க்கெட்டை உற்று நோக்கி வருகிறோம். கார் கடன் மார்க்கெட் நிலவரத்தை கருத்தில்க்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார் கடனுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பை உயர்த்தியுள்ளோம்," என்றார்.