யாஹூ இணைய தளம் மேலும் சில இந்திய மாநில மொழிகளில் தன் தளத்தை வழங்க திட்டமிடுகிறது. இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 80% பேர் இப்போது யாஹூ தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இத்தளம் கிடைக்கிறது. இந்தியர்கள் காட்டும் ஆர்வத்தினை அடுத்து, மேலும் ஐந்து இந்திய மொழிகளில் தன் தளத்தினை யாஹூ அமைக்க உள்ளது.
யாஹூ தளத்தின் முகப்பு பக்கத்தினையும், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் மாற்றி அமைக்கும் முயற்சியில் யாஹூ ஈடுபட்டு வருகிறது. யாஹூவின் போட்டியாளரான கூகுள், தன் தளத்தினை தமிழ், வங்காளி, குஜராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட்டு வருகிறது. இதனை யாஹூ நிறுவனத்தின் இந்திய ஆய்வு மையத்தின் தலைவர் அருணவ் சின்ஹா தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் இயங்கும் தன் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்திற்கென நூறு கோடி டாலர் நிதியினை யாஹூ நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் பெரும்பகுதி பெங்களூருவில் இயங்கும் மையத்திற்குக் கிடைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.