பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது. இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும்
முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது. இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் அக்கவுண்ட்களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த அக்கவுண்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் வைரஸ் தாக்குதல் தொடங்கியது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில், இந்த மால்வேர் EXE, DLL, மற்றும் HTML ஆகிய பைல்களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது. மிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது.
இப்போது, இந்த வைரஸின் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies, என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் முறை வந்த போது, ராம்நிட் வைரஸ் பிளாஷ் ட்ரைவ்கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது பேஸ்புக் மூலம் பரவுகிறது.
கம்ப்யூட்டரில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள், கம்ப்யூட்டரின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே தான் இந்த வைரஸின் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் விளையாடுகிறது.
இரண்டு வகைகளில் இந்த வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். முதலாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் லிங்க் இருந்தால், அவற்றின் மீது கிளிக் செய்திட வேண்டாம். எந்த தளம், நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும், அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே கிளிக் செய்திட வேண்டும். இரண்டாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டையே மற்ற அக்கவுண்ட்கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வது, புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.
தற்போதைக்கு இந்த ராம்நிட் வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில், பன்னாட்டளவில் 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.