காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரீகமாகவும், அசிங்கமாகவும் நடந்து கொள்வோரைத் தடுத்து நிறுத்தப் போவதாக இந்து முன்னணி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'விடிந்தால்' காதலர் தினம். இதையடுத்து 'கலாச்சாரத்தைப்' பாதுகாக்க கிளம்பி விட்டன இந்து முன்னணி உள்ளிட்ட 'மாரல் போலீஸ்' படையினர்.
காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தயாராகி வருவோருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
காதல் என்ற பெயரில் சமூக ஒழுக்கங்களைச் சீர்குலைக்கும் கயவர்களை இந்து முன்னணி எச்சரிக்கிறது. புனிதமான கோயில்களில், ஜோடியாக வந்து களங்கப்படுத்தும் முயற்சியை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில், பொது இடங்களில் அநாகரீகமாக, அசிங்கமாக நடந்து கொள்பவர்களை இந்து முன்னணி தடுத்து நிறுத்தும்.
கல்யாணம் பண்ணி வைப்போம்
உண்மையான காதலர்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கவும் இந்து முன்னணி தொண்டர்கள் விழிப்புடன் செயல்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசும், காவல்துறையும் `காதலர் தினம்' என்ற பெயரில் அநாகரீகக் கூத்தடிப்பதைத் தடுக்க வேண்டும். சட்டம் என்பது வருமுன் காப்பதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களைக் காத்திடவும் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் முருகானந்தம்.