தங்களுடைய பாரியம்பரியமான பெரிய வீட்டின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு விடுவப்போவதாக பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார் வீட்டு உரிமையாளர். விளம்பரத்தைப் பார்த்து ஒரு பெரும் செல்வந்தர் வருகிறார். அவருடைய தோரணையே பெரிய தொழிலபதிபர் என்பதைக் காட்டுகிறது. வீட்டைக் குத்தகைக்கு எடுக்க வந்திருப்பதாக அவர் வீட்டு உரிமையாளரிடம் கூறுவதற்கு முன்பாகவே உரிமையாளரும், அவருடைய மனைவியும் விழுந்தடித்துக் கொண்டு வந்து அவரை வரவேற்கின்றனர்.
குத்தகைக்கான தொகை எவ்வளவு என்று வந்தவர் கேட்க, " ஐந்து லட்சம் டாலர்கள்' என்று பதிலளிக்கிறார் உரிமையாளர். தன்னுடைய பர்ஸிலிருந்து பணத்தை எடுக்கும்போது அதில் இருக்கும் 1000 மதிப்பிலான டாலர்கள் யாவும் சிதறி, கீழே விழுகின்றன. அவற்றைப் பொறுக்கி, கொடுக்கும் தம்பதியினரிடம், ""டாலராக கொடுக்கவா...இல்லை செக்காக கொடுக்கட்டுமா?'' என்று கேட்கிறார். "நீங்கள் எப்படிக் கொடுத்தாலும் எங்களுக்குச் சரிதான்...''என்கின்றனர்.
பின்னர் அவர் தன்னுடைய கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு செக் புக்கை எடுக்கிறார். அது அந்த நாட்டின் பெரிய வங்கியினுடைய செக் புக். அதைப் பார்க்கும் கணவனும், மனைவியும் சந்தோஷத்தில் உறைந்து போகின்றனர். அவர்களுக்கு ஐந்து லட்சத்திற்கான டாலர்களை எழுதி, கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து ஒப்பந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறார். கணவனும், மனைவியும் தங்களிடம் பெருந்தொகை வந்திருப்பதையெண்ணி அன்று இரவு முழுவதும் உறங்காமலேயே விழித்திருக்கின்றனர். இரவு விடிகிறது.
அவர்களுடைய நகரத்தின் பகுதிலிருக்கும் வங்கிக்குச் சென்று செக்கைக் கொடுத்து டாலராக மாற்ற முயற்சிக்கும்போதுதான் அவர் கொடுத்தது "போலி செக்' என்பது தெரிய வருகிறது. இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அந்தப் பெயருடைய வங்கிக் கணக்கில் சைபர் டாலர்தான் இருக்கிறது. பின் வருத்தத்துடன் வீடு திரும்புகின்றனர். வீட்டின் மேற்புறத்தில் யாரோ சுவற்றில் ஆணி அடிக்கும் சப்தம் கேட்டு மேலே சென்று பார்க்கின்றனர். அங்கே, தடிமனான ஆள் ஆணியை அடித்துக்கொண்டிருக்கிறான். அவனை விசாரிக்கும்போது அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது, அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்த போலி ஆசாமி உள் வாடகைக்கு விட்டிருக்கிறான் என்பது. இருவரும் செய்வதறியாது திகைத்து, பின் தங்களுடைய அறைக்குத் திரும்புகின்றனர். வீட்டு உரிமையாளரும், அவருடைய மனைவியும் அந்த நபரை எப்படி வீட்டிலிருந்து துரத்துகின்றனர், அந்த போலி ஆசாமியினால் அவர்கள் எப்படிப் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் காட்சி.
இந்தப் படத்தைப் பார்த்தபோது நான் வியந்துபோனேன். காரணம், 2012ல் நம் சமூகத்தில் நடக்கும் செக் மோசடி, வாடகை வீட்டை உள் வாடகைக்கு விடுவது, மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற குற்றச் செயல்களை மையமாக வைத்து 1965லேயே படம் வெளிவந்திருக்கிறது என்பதுதான். ஹாலிவுட் படமான இதை ஜான் ஸ்கேல் சிங்கேர் இயக்கியிருக்கிறார்.