
"லைஃப் இஸ் பியூட்டிபுல்"ஒரு யூத நாயகன் நாஜி மரண முகாமிலிருந்து தன் மகனைக் காப்பாற்றும் கதைதான் "லைஃப் இஸ் பியூட்டிபுல் (வாழ்க்கை அழகானது). தனது குறும்புத்தனமான விளையாட்டு மற்றும் நகைச்சுவை உணர்வு மூலமாக எல்லோருடைய மனதையும் கவரக்கூடியவர் யூதரான கைடா டோரா. பிறப்பால் இவர் யூதர் என்கிற காரணத்திற்காக ஜெர்மானிய நாசிப் படைகளால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகிறார்.
இவருடன் இவரது மகன் ஜோஷுவாவும் கொண்டு செல்லப்படுகிறான். மகனும், தானும் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்பதை அறியும் கைடா டோரா தன் மகனிடம், ""இப்போது நாம் ஒரு விளையாட்டு விளையாடப் போகிறோம்...இந்தச் சிறையிலுள்ள எல்லோருமே நம்முடைய விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளக் கூடியவர்கள்தான்... அதனால் நீ எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்க வேண்டும். இங்குள்ள காவலர்கள் எல்லோரும் நம் மீது கோபமாக உள்ளதற்குக் காரணம், அவர்களுக்கு பீரங்கி வேண்டும் என்பதற்காதான். ஆனால், பீரங்கி நமக்குதான் கிடைக்கப்போகிறது. இந்த விளையாட்டில் யார் அதிகமான புள்ளிகளைப் பெருகிறார்களோ அவர்களுக்கே பீரங்கி..'' என்று ஒரு பொய்யைக் கூறுகிறார்.
தனது மகனின் பிஞ்சு மனதிற்குள் நாசிப் படைகளின் கோரமுகம் தெரியக்கூடாது என்றும் எண்ணுகிறார். அதற்காக அவர் ஒரு கோமாளியைப் போல தன் மகனிடம் விளையாடுகிறார். சிறையில் நடக்கும் அனைத்தும் அந்த பிஞ்சு மனதில் விளையாட்டாகவே தெரிகிறது. இதனால் கைடா டோராவின் மனது சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறது.
இச்சூழலில் நேசப் படைகளால் ஜெர்மானிய படைகள் தாக்கப்படுகின்றன. அந்தச் சமயத்தில் தனது மனைவியைப் பார்க்க கைடா டோரா முற்படுகிறார். அப்போது அவர் நாசிப் படைகளால் கொல்லப்படுகிறார். இறுதியில் ஜோஷுவா தனது அம்மாவிடம் பத்திரமாக சேருகிறான். ஜோஷ்வா தன் தந்தையின் தியாகத்தைச் சொல்வதோடு படம் நிறைவடைகிறது.
இத்தாலிய மொழிப் படமான "லைஃப் இஸ் பியூட்டிபுல்' 1997ம் ஆண்டு வெளிவந்தது. ஆஸ்கர் விருதுகள் பலவற்றிக்கும் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான விருதை வென்றது. மேலும், சிறந்த இசையமைப்பு, சிறந்த நடிகர் போன்றவற்றிக்கான ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.