
கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.
பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற படத்தில் இப்பாடலை போட்டுள்ளனர். படு வேகமாக இந்தப் பாடல் பிரபலமாகியுள்ளது. இதுவரை யூடியூபில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் அடித்துள்ளதாம். படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.
3 படம் போண்டியானதால், கொலவெறிப் பாடல் மீதான மோகமும் மங்கிப் போய் விட்டது. இதையடுத்து அந்த இடத்தை இந்த கோவிந்தாய நிரப்பும் என்று சொல்கிறார்கள்.
இந்த ஆண்டின் மிகப் பிரபலமான கன்னடப் பாடலாக இது உருவெடுத்துள்ளதாம். இப்பாடலுக்கு இசையமைத்துள்ளவர் குருகிரண். படத்தை இயக்கியிருப்பவர் புதுமுகமான பவன் உடையார். சேத்தன் மற்றும் இந்து நாகராஜ் பாடலைப் பாடியுள்ளனர்.
சினிமா பாணி இசை, நாட்டுப் புற இசை என பலதையும் கலந்து பப்பளக்க வைத்துள்ளனர் இந்தப் பாடலை. இப்பாடலுக்கு டான்ஸ் போட்டிருப்பவர்கள் கோமல் மற்றும் பருல் யாதவ். பீஜப்பூர் கோட்டை மற்றும் இப்ராகிம் ரோஸா ஆகிய இடங்களில் பாடலைப் படமாக்கியுள்ளனர்.
பாட்டு எப்படி இருக்கிறது என்று 'ஹேளிபிட்டு ஹேளி குரு....'!