கள்ளப்பருந்து சினிமா விமர்சனம்

டாக்டர் காளிதாஸ், மிகப்பெரிய கோடீஸ்வரர். இளம் மனைவி மற்றும் அழகான இரண்டு மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர், மகள்கள் கெட்டு போய்விடக்கூடாதே என்பதற்காக அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறார். அதுவே ஆபத்தாக முடிகிறது.  மகள்கள் இரண்டு பேரும் அவருக்கு தெரியாமல் அரைகுறை உடை அணிவதும், பாய்ப்ரெண்ட்சுடன் சுற்றுவதுமாக பாதை தவறி போகிறார்கள். இது, அவருடைய மனைவிக்கு தெரிந்தும், கணவருக்கு பயந்து அவரிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

காளிதாஸ் தன் குடும்பத்துக்கு ஏற்றவாறு, ஒரு கார் டிரைவரை தேடுகிறார். அந்த பொறுப்பை பண ஆசை பிடித்த ஒரு மோசடி பேர்வழியிடம் அவர் ஒப்படைக்கிறார். அவன், பல பெண்களை மணந்து மோசடி செய்த ஒருவனை டிரைவராக, காளிதாஸ் வீட்டுக்கு அனுப்புகிறான்.  அந்த டிரைவர் காளிதாசின் மகள்களை தன் வலையில் விழ வைப்பதுடன், அவருடைய மனைவிக்கும் குறி வைக்கிறான். இது, காளிதாசுக்கு தெரியவரும்போது, அவர் என்ன முடிவு எடுக்கிறார்? என்பது, கிளைமாக்ஸ்.

வில்லத்தனம் மிகுந்த டிரைவர் வேடத்தில், கதையின் நாயகனாக வருபவர், அம்சு. பல பெண்களை மணந்த கல்யாண மன்னனான அவர், சுடலை என்ற பெயரில் காளிதாஸ் வீட்டுக்குள் நுழைவதும், உலகமே அறியாத அப்பாவி போல் நடிப்பதும், அந்த இரண்டு பெண்களுடனும் காமக்களியாட்டம் போடுவதுமாக, படம் முழுக்க ரகளை செய்கிறார்.  கதை நாயகிகள் ஷோபினா வாசுதேவ், மஞ்சு தீட்சித் ஆகிய இருவரும் அக்காள்-தங்கையாக வருகிறார்கள். சுடலை எனக்குத்தான்...இல்லையில்லை, எனக்குத்தான் என்று இருவரும் அப்பா முன்னிலையிலேயே அடித்து கொள்ளும் இடம், நல்ல தமாஷ்.

கலைப்புலி ஜி. சேகரன் படத்தின் பாடல்கள் எழுதி, இசையமைத்திருப்பதுடன் சடைமுடி செல்வமாக காமெடியும் பண்ணுகிறார். இவர் முகவரி தேடி அலைந்து அடி வாங்கும் காட்சியிலும், காளிதாசுக்கு பயந்து அம்சு வீட்டுக்குள் பதுங்குகிற காட்சியிலும், தியேட்டரில் கலகலப்பு. கூடவே கிங்காகும் சேர்ந்து சிரிக்க வைக்கிறார்.  தன் குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி நெகிழும்போது, காளிதாஸ் கலங்க வைக்கிறார்.  கதைக்கு பொருந்துகிற டைட்டில். பிள்ளைகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்தால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை கவர்ச்சி-காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், டைரக்டர் இதயன்.

இடைவேளை வரை காட்சிகள், டி.வி. நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ஒரு பெரிய கோடீஸ்வரர் தன் குடும்பத்துக்கு டிரைவரை தேர்வு செய்யும்போது இத்தனை அலட்சியமாகவா இருப்பார்? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.  இடைவேளைக்குப்பின், கதை விறுவிறுப்பாக நகர்கிறது. படத்தின் முடிவு, எதிர்பாராத திகில்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்