
குளிர்காலம் என்றாலே உதடுகள் விரைவில் வறட்சியடைந்துவிடும். அதிலும் இந்த உதடுகள் மிகுந்த சென்சிட்டிவ் ஆன ஒரு பகுதி. அதனால் பேசுவதற்கு, சாப்பிடுவதற்கு மற்றும் சிரிப்பதற்கு பயன்படுத்தும் உதடுகளில் எளிதில் வெடிப்புகள், இரத்தம் வடிதல் மற்றும் சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். மேலும் எப்படி சருமம் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸால் ஆனதோ, அதேப்போல் தான் உதடுகளும் அவற்றால் உருவானது. அத்தகைய உதட்டில் மற்ற பகுதியில் இருக்கும் முடி அல்லது வியர்வை சுரப்பி போன்றவை ஏதும் கிடையாது.
ஆகவே அத்தகை பாதுகாப்பு படலங்கள் இல்லாததால், உதடுகள் விரைவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிப்படைந்து விடுகின்றன. எனவே குளிர்காலத்தில் உதடுகளில் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு சில டிப்ஸ் இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா!!!
* குளிர்காலத்தில் உதடுகளுக்கு எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீம் அல்லது லிப் பாம் போன்றவற்றை வெளியே செல்லும் போது உதடுகளில் தடவிக் கொண்டால், எந்த ஒரு பாதிப்பும் உதடுகளுக்கு ஏற்படாமல் இருக்கும்.
* என்னதான் எச்சிலை அடிக்கடி உதடுகளில் படச் செய்தாலும், அவை விரைவில் காய்ந்துவிடும். மேலும் சிலருக்கு அடிக்கடி உதடுகளில் எச்சில் படும்படி செய்வது பழக்கமாக இருக்கும். அத்தகையவர்கள் ஏதேனும் பிடித்த ப்ளேவரால் செய்யப்படும் லிப் பாமை பயன்படுத்துவது நல்லதாக இருக்கும்.
* எப்போதும் சுவாசிக்கும் போது வாயால் சுவாசிக்காமல், மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டும்.
* ஏதாவது அழகுப் பொருட்கள் அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவது போல் இருந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* தினமும் அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். முக்கியமாக குளிர்காலத்தில் தவறாமல் குடிக்க வேண்டும்.
* அடிக்கடி உதட்டைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டால், உடலில் வைட்டமின் பி2 குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே தினமும் வைட்டமின் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
* ஒருசில நல்ல தரமான லிப் பாம்களில் ஜொஜோபா எண்ணெய், வெண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி சூரியகதிரினால் உதட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் சன்ஸ்கிரீன் SPF6 இருக்கும்.
* புகைப்பிடித்தால் உதடுகளில் விரைவில் சுருக்கங்களும், அதே சமயம் ஆல்கஹால் பருகினால் உதடுகளில் அதிக வறட்சியும் ஏற்படும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
* உதடுகளில் ஏதேனும் வெடிப்புகள் ஏற்பட்டால், அவற்றை மறைக்க லிப்ஸ்டிக் போட வேண்டாம். ஏனெனில் அவை உதட்டில் உள்ள வெடிப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
எனவே மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு நடந்து வந்தால், குளிர்காலத்தில் உங்கள் உதட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.