Marley & Me (2008) சினிமா விமர்சனம்


நட்புக்கும் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றது நாய்கள். ஒரு நாயிற்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது இந்தப்படம். படம் John’உம் (Owen Wilson) Jennifer’உம் (Jennifer Aniston) திருமணம் முடிப்பதோடு ஆரம்பிக்கின்றது. இருவரும் பத்திரிகைத் தொழில் சார்ந்தவர்கள். முழு எதிர்காலத்தையுமே விலாவாரியாக திட்டமிட்டு நடத்திவருபவர் Jennifer. ஒரு சிறந்த களமுனை நிருபராக வர வேண்டும் என்பதை மட்டுமே ஒரே கனாவாகக் கொண்டிருக்கும்
John, மனைவியின் திட்டமிடலிற்கு இயைந்து நடந்து வருகின்றார். திருமண வாழ்வின் முதற்கட்டமாக, Florida மாநிலத்தில் வேலையும் எடுத்து குடியேறுகின்றனர். இப்போது திட்டத்தின் அடுத்த கட்டம் — பிள்ளை பெறுவது. தனது கனா இன்னமும் நனாவாகாத நிலையில், பிள்ளை குட்டிகள் என்று மேலதிகப் பொறுப்பை ஏற்க John’க்கு தயக்கம். எனவே, நண்பனின் ஆலோசனைப்படி, மனைவிக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்து மனைவியின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கின்றார். நாயகளிலேயே மிகவும் பணிவானது Labrador வகை நாய்கள்தான் என்று சொல்லப்பட, அதிலேயும் மிகவும் சோர்ந்து போய்யிருக்கும் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுக்கின்றனர் John’உம் Jennifer’உம். Marley என பெயரிடப்படும் இந்த நாய்க்குட்டியோடு ஆரம்பமாகின்றது அவர்களது வாழ்வின் திருப்பம், இன்பம், துன்பம் எல்லாமே. சாதுவாக இருந்த குட்டி, மகா குழப்படிக்கார நாயாக வளருகின்றது. அது செய்யும் அநியாயம் படத்தின் முன்பாகத்தின் அட்டகாசமான கலகலப்பு. எவ்வளவுதான் பிற்போட்டாலும், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் என்ற பொறுப்பை எதிர்கொண்டே ஆகவேண்டும் எனும்போது John’இனதும், படத்தினதும் கலகலப்பு நின்று போகின்றது. பிள்ளைகள் குடும்பத்தில் வந்து சேர, Jennifer’இன் பல்லாண்டுத் திட்டங்களும் நொருங்கிப்போகின்றன. இதற்குள் இன்னமும் நிறைவேறாத John’இன் கனவு வேறு. இவ்வாறாக இவர்களின் குடும்பம் வாழ்க்கைச் சுழியில் சுற்றிச் சுழல்வதும், அதற்குள் Marley ஒரு மறைமுகமான நங்கூரமாக இருப்பதையும் படம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது.

படத்தின் சுபாவம், John’இனதும், Marley’இனதும் வயதிற்கு ஏற்றவாறாக மாறிக்கொண்டு செல்கின்றது: துடுக்குடனும், நகைச்சுவையுடனும் ஆரம்பிக்கும் படம், கலகலப்பே இல்லாத ஒரு பகுதியினுள்ளாகச் சென்று, சாந்தமாக முடிவடைகின்றது; கடைசி பத்து நிமிடத்திற்கு தவிர்க்க முடியாமல் கண்கலங்க வைக்கின்றது. “ஓ” என்று அழுகின்ற காட்சிகளை வைத்தால்தான் படம் உணர்வுபூர்வமாக (emotional) இருக்கமுடியும் என்பது தவறு என்று காட்டியிருக்கின்றார் இயக்குணர். முதன்மை நட்சத்திரங்கள் இருவரும் கதாபாத்திரங்களிற்கு அழகாக உயிரளித்திருக்கின்றார்கள். கொஞ்ச நேரத்திற்கு வரும், குழந்தை நட்சத்திரங்கள் கூட சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள்.

படம் நாயைப் பற்றியதா, அல்லது John’ஐப் பற்றியதா என்று ஒரு கேள்வி வரலாம். என்றாலும், சற்றே ஆறஅமர இருந்து யோசித்துப் பார்த்தால், John’இன் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும், Marley எவ்வாறு நிர்ணயிக்கின்றது என்பதை உணரலாம். ஒருவிதத்தில், Marley எனும் நாய், John என்ற மனிதனின் ஒரு குறியீட்டு வடிவம் (symbolic form) என்று கூட வாதாடலாம். படம் கவலையாகத்தான் முடியும் என்பதை, படத்தின் முதலாவது காட்சியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். கவலையாக முடிந்தாலும், மனம் நிறைவாக இருக்கின்றது. தாராளமாகப் பார்க்கலாம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவருமே இதை சரிசமமாக இரசிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget