
12 மணி நேரம், பத்து மில்லியன் டாலர், கடத்தப்பட்ட மகள் என்று போஸ்டரிலேயே க்ளியராக கதையை தந்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு அப்படியே அப்பீட்டானால் பிழைத்தீர்கள். அதைவிட்டு டிக்கெட் எடுத்து உள்ளே போனால்.
நிகோலஸ் கேஜும் மூணு கூட்டாளிகளும் சேர்ந்து பத்து மில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறாங்க. பின்னாடியே எஃப்பிஐ துரத்துது. கூட்டாளிகள் எஸ்ஸாக இவர் மட்டும் மாட்டிக்கிறார். பணத்தோடு சிக்கினால் சாகிறவரை களி தின்ன வேண்டியதுதான், அதனால் உஷாராக பத்து மில்லியனையும் எரிச்சுடுறார்.
கொள்ளையடிக்கிற கேப் -பில் நிகோலஸ் அவரோட சின்ன பொண்ணுகூட பேசுறார். நிகோலஸுக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவரைதான் பின்னாடி கடத்தப் போறாங்க. உஷாரா கவனிச்சுக்குங்கன்னு அப்பவே சிக்னல் தந்திடுறாங்க.
நம்ம கேஜ; ஜெயில்லேர்ந்து ரிலீஸாகி பொண்ணை பார்க்க வர்றார். கையில பொpய கரடி பொம்மை (கான் ஏர் படத்தில் பொம்மை ரொம்ப சின்னது. அதிலயும் இதே ஜெயில், இதே மகள், படத்தை இயக்குனதும் இதே சைமன் வெஸ்ட்). இதுக்கு மேல கதையை சொல்றது வேஸ்ட். மகள் அப்பாகூட சண்டைப் போடணும், அப்புறம் அந்த பத்து மில்லியனுக்காக முன்னாள் கூட்டாளியே மகளை கடத்தணும், பாசக்கார அப்பா ரத்தகளரியா மகளை காப்பாத்த, மகள் டாடின்னு பாச மழை பொழிய ஹாலிவுட்டின் நாலயிரத்து முன்னூற்று ஒன்பதாவது மகளை அப்பா காப்பாத்துற படம் ஓவர்.
லீவிங் லாஸ்வேகாஸ், தி பேட் லெப்டினெண்ட் படங்களில் அருமையான நடிப்பை தந்த நிகோலஸ் கோஜுக்கு ஸ்டோலன் மாதிரி அட்டு படங்கள் வாpசையாக மாட்டுவதன் மர்மம் தொpயவில்லை. படு மோசமான ஆக்ஷன் காட்சிகள். படுத்தியெடுக்கிற வில்லன். சொதப்பலான திரைக்கதை என்று இந்த வருடத்தின் சூப்பர் ப்ளாப்.
படத்தை இயக்கிய சைமன் வெஸ்ட் கான் ஏர், டாம் ரைடர் போன்ற பார்க்கிற மாதிரி ஆக் ஷன் படங்களை எடுத்தவர். சில்வஸ்டர் ஸ்டாலோன் தனது எக்ஸ்பென்டபிள்ஸ் படத்தை விமர்சகர்கள் பிரித்து மேயந்த போது உஷாராக இரண்டாவது பாகத்தை இயக்கும் பொறுப்பை இவரிடம்தான் தள்ளிவிட்டார். பத்து பன்னிரெண்டு மசில்மேன்களை வைத்து ஓரளவு ஒப்பேற்றவும் செய்தார். ஆனால் இந்தப் படம்? எதை வேணும்னாலும் மன்னிக்கலாம் கேஜ், தங்கத்தை ஆட்டையைப் போடுறதை மட்டும் ஜீரணிக்கவே முடியாது. ஒட்டடை குச்சி மாதிரி ஒரு கம்பியை வைத்து சரியா தங்கம் இருக்கிற இடத்துக்கு கீழே ஓட்டையைப் போட்டு, தங்கத்தை உருக்கி, உருகி வர்ற தங்கத்தை எடுத்துக் கொண்டு அஞ்சே நிமிஷத்தில் வேலையை முடித்து தூசு படமாமல் தப்பிக்கிறாங்க. பேங்கில் பணம் எடுக்கவே இதைவிட நேரமாகுமேப்பா.
நீங்க எவ்வளவு மொக்கையாக கற்பனை செய்து கொண்டு போனாலும் அதைவிட மரண மொக்கையான ஃபீலிங்குக்கு ஸ்டோலன் உத்தரவாதம்.