தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு
ரிலீசானது துப்பாக்கி படம்.
பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.
இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.