
கமலுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் மீண்டும் கமல்-ஸ்ரீதேவியை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான படம் மூன்றாம் பிறை. இப்படத்தில் ஆசிரியராக கமலும், ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து
மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவியும் நடித்து இருந்தனர். அழகான காதல் கதையை சொல்லி இருந்தார் பாலு மகேந்திரா. இப்படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் வியக்க வைத்தது. படத்திற்கு இளையராஜாவின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் மீண்டும் கமல், ஸ்ரீதேவி ஆகியோரையே நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.