இந்த ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இன்னும் நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களையும் சேர்த்து மொத்தம் தமிழில் 135 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. இவற்றில் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களை ஓரளவு திருப்திப்படுத்திய படங்கள் என்று பார்த்தால், 10 படங்கள் தேறுகின்றன. இவை பத்தும் சிறந்த படங்கள் அல்ல... அதிக அளவு கலெக்ஷன் பார்த்தவை அவ்வளவுதான்.
ஒரு கல் ஒரு கண்ணாடி
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாக நடித்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. அவருக்கு நிகரான வேடம் காமெடியன் சந்தானத்துக்கு தரப்பட்டது. அவரும் அதை சிறப்பாகவே செய்து முடித்தார். படம் பெரிய வெற்றி. தயாரிப்பு செலவை விட பத்து மடங்கு லாபம் தந்த படம் இது. ஓடிய நாட்கள், வசூல் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்த ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் என்றால் அது ஒரு கல் ஒரு கண்ணாடிதான்.
சுந்தரபாண்டியன்
சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடித்த படம் சுந்தரபாண்டியன். லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருந்தார். எஸ் ஆர் பிரபாகரன் என்ற புதிய இயக்குநர் இந்தப் படத்தில் அறிமுகமானார். ஆனால் அவர் படத்தை உருவாக்கியிருந்த விதம் அவரை புதுமுகமாகக் காட்டவில்லை. இந்த ஆண்டின் சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்றாக சுந்தரபாண்டியனை நிற்கவைத்துவிட்டது.
துப்பாக்கி
விஜய் நடித்து, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய படம். லாஜிக் இல்லாத ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்று. க்ளைமாக்ஸ் எல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமாக இருக்கும். ஆனாலும் படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்துவிட்டது.
நான் ஈ
இந்த ஆண்டு வெளியான இன்னுமொரு அதிரடி வெற்றிப் படம் நான் ஈ. ஏதோ ஒரு இத்தாலியப் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும், படத்தின் புத்திசாலித்தனமான திரைக்கதை, அசத்தலான சிஜி வேலைகள், அழகு சமந்தா என நம்மை படத்தோடு கட்டிப்போட்ட சமாச்சாரங்கள் நிறையவே. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக வெளியான படம் ஒன்று, இரண்டிலுமே வசூலைக் குவித்தது அநேகமாக இதுதான் முதல்முறை எனலாம்.
பீட்சா
தமிழில் எத்தனையோ த்ரில்லர்கள் வந்திருந்தாலும், பீட்ஸா அவற்றில் தனி ரகம். சினிமாவுக்குள் ஒரு சினிமா மாதிரிதான் இந்தக் கதையும். ரொம்ப அழுத்தமாக காட்சிகள், விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பு படத்துக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.
கலகலப்பு
ஒரு மினிமம் கியாரண்டி படமாக சுந்தர் சி எடுத்த கவர்ச்சி ப்ளஸ் காமெடிப் படமான கலகலப்பு, அத்தனை விநியோகஸ்தர்களின் கல்லாப்பெட்டிகளையும் கலகலப்பாக்கிவிட்டது.
காதலில் சொதப்புவது எப்படி
ஒரு குறும்படம் பெரும் படமானது என்பதுதான் இந்தப் படத்துக்கு பொருத்தமான தலைப்பு. சரிந்து கொண்டிருந்த அமலா பாலின் மார்க்கெட்டை இழுத்து நிறுத்திய படம் இது. தமிழ், தெலுங்கு இரண்டிலுமே பெரிய வெற்றியைப் பெற்றது.
மனம் கொத்திப் பறவை
பெரும்பாலும் இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள்தான் கிடைத்தன. ஆனால் பி அண்ட் சி ஏரியாக்களில் இந்த விமர்சனங்களெல்லாம் எடுபடவில்லை. நல்ல வசூல். 100 நாட்களைத் தாண்டிய வெகு சில படங்களில் இந்த மனம் கொத்திப் பறவையும் ஒன்று.
அட்டகத்தி
முற்றிலும் புதியவர்களே எடுத்த படம். நடித்தவர்களும் புதுசுதான். நாம் அன்றாடம் பார்க்கும் சென்னைப் புறநகரை அப்படியே திரைக்குள் சிறைப்பிடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட சென்னை 28 பாணியில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, நல்ல லாபத்தைக் கொடுத்த படம் இது.
நண்பன்
தமிழ் சினிமாவில் பிரேக் ஈவன் என்பார்களே.. அந்த நிலையைத் தொட்ட நான்கைந்து படங்களில் நண்பனும் ஒன்று. அதாவது போட்ட முதல் தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. அவ்வளவுதான். அதற்குமேல் பெரிதாக வெற்றி என்று கொண்டாட ஒன்றுமில்லை. ஷங்கர் படங்களில் ரொம்ப சாதாரண வெற்றியைப் பெற்றது அநேகமாக இந்தப் படமாகத்தான் இருக்கும். இந்த பத்துப் படங்கள் தவிர, வழக்கு எண் 18/9, கழுகு, சாட்டை, பாகன், மெரினா, நீர்ப்பறவை போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாத அளவு வசூலைப் பெற்றன.