கமலிடம் பேட்டி எடுக்கையில் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்பதும், ரஜினியிடம் கமலுடன் மீண்டும் இணைவீர்களா என கேட்பதும் சம்பிரதாயமாகி பல வருடங்கள் ஆகிறது. இப்படி இணைந்து நடிப்பீங்களா என்று கேட்பது அரசியல் வாசனையே இல்லாத நடிகைகளிடம் அரசியலுக்கு வருவீங்களா என்று சும்மாச்சுக்கும் போட்டு வாங்கும் அசட்டு கேள்வியாகி மாமாங்கம் ஆகிறது.
அதுபோலதான் விஜய்யிடம் அஜித்துடன் நடிப்பீர்களா என்று கேட்டதும். மீடியாவில் இப்படியொரு கேள்வி முன் வைக்கப்படும் போது விஜய் என்ன சொல்வார்?
அஜித்துடன் நடிக்கிறதெல்லாம் செட்டாவாது என்றா சொல்ல முடியும்? நல்ல பொருத்தமான ஸ்கிரிப்ட் இருந்தால் பார்க்கலாம் என்றுதான் பதலளிக்க முடியும். அதைத்தான் விஜய்யும் சொன்னார். இதை வைத்து விஜய் ரெடி, அஜித் ரெடியா என்று ஏலம்விட ஆரம்பித்துவிட்டார்கள் சில பொழுதுபோகாத ஆசாமிகள்.
விஷ்ணுவர்தன் படம், அடுத்து சிறுத்தை சிவா படம் என்று அஜித் பிஸியாக இருப்பது போலவே விஜய் சைடும் படு பிஸி. இவர்கள் கமிட் செய்த படங்களை முடிக்கவே இரண்டு வருடங்கள் ஆகும் என்கிற போது இணைந்து நடிப்பதெல்லாம் சும்மா காமெடி மட்டுமே.