இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் ஒரு தெலுங்குப் படம் முத்திரை பதித்திருக்கிறது. அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், திருவிழா கோலமாகவும் இந்த தெலுங்குப் படம் ரிலீசான திரையரங்குகள் காட்சியளிக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் இந்தப் படத்தை தமிழக மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்? பெரிதாக ஒன்றுமில்லை. தெரிந்த கதைதான். குடும்ப உறவுகளின் மேன்மையை, அதன் அவசியத்தை வலியுறுத்தும் அதே
‘ராஜஸ்ரீ புரொடக்ஷன்ஸ்’ சூரஜ் பர்ஜாத்யா பிராண்ட்தான். ஆனால், இவற்றின் சாயல் இன்றி சுயமாக நிற்பதுதான் ‘சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு’ (சீதா வீட்டு வாசலில் சிறிய மல்லிகைக் கொடி) தெலுங்குப் படத்தை தனித்து காட்டுகிறது.
சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த சீதா, தாய்மாமனின் பராமரிப்பில் வளர்கிறாள். தாய்மாமனின் குடும்பமே அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அவளது பெரியப்பாவும், சித்தப்பாவும் செல்வத்தில் திளைப்பவர்கள். கொஞ்சம் பணத்திமிருடன் வளைய வருபவர்கள். இவர்களுக்கு சீதாவின் தாய்மாமனையும் அவர் குடும்பத்தையும் பிடிக்காது. எப்படி இந்த இரு குடும்பங்களும் சீதாவின் திருமணத்தில் ஒன்று சேர்கிறது என்பதுதான் படம். இதைதான் கண்ணீரில் கருவிழிகள் தத்தளிக்கும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் கேரக்டர் ஸ்கெட்ச். ஒரேயொரு காட்சிக்கு வந்து போகும் நடிகருக்கு கூட ஒரு இயல்பை, குணத்தை கொடுத்திருக்கிறார்கள். அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பிரகாஷ் ராஜ், எதிர்படும் அனைவருக்கும் காலை வணக்கம் சொல்கிறார். மேடான பகுதியில் சைக்கிள் மிதிக்க சிரமப்படும் சிறுவர்களுக்கு உதவுகிறார். ரயில்வே லெவல் கிராசிங்கில் குனிந்து செல்ல விருப்பமின்றி, வளைந்து கொடுக்காமல் அது திறப்பதற்காக நெஞ்சை நிமிர்த்தி காத்திருக்கிறார் வெங்கடேஷ். அதே போன்றதொரு லெவல் கிராசிங்கை அசால்ட்டாக தாண்டி குதித்து செல்கிறார் மகேஷ் பாபு. இப்படி ஒவ்வொருவரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஒரே ஷாட்டில் இயக்குனர் புரிய வைத்து விடுகிறார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஆக்டரான வெங்கடேஷும், சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவும் இப்படத்தில் அண்ணன் , தம்பியாக வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி, செல்போனும் சிம்கார்டுமாக பின்னிப் பிணைந்திருக்கிறது. ‘டேய்... டேய்...’ என பரஸ்பரம் கொஞ்சிக் கொள்வதும், ‘சொல்லுடா...’ என ஒருமையில் அழைத்தாலும் மரியாதையை விட்டுக்கொடுக்காமல் பழகுவதும் கொள்ளை அழகு. இருவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் கச்சிதம்.
குறிப்பாக இடைவேளையின் போது, ‘உன் குணத்தை கொஞ்சம் நீ மாத்திக்கணும்...’ என மகேஷ் பாபு சொல்வதும், ‘எல்லாம் தெரியும். நீ போய் பணக்காரங்களோட நாடகத்துல நடி’ என நக்கலாக வெங்கடேஷ் பதிலளிப்பதும், அதையடுத்து பூந்தொட்டியை மகேஷ் பாபு எட்டி உதைப்பதும்... மனநிலையின் பயணத்தை துல்லியமாகப் புரிய வைப்பவை. அதுவும் கிளைமாக்சில் பத்ராச்சலம் கோயில் படிக்கெட்டில் அமர்ந்தபடி இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் கட்டம், கொள்ளை அழகு.
சீதா என்னும் டைட்டில் ரோலில் அஞ்சலி. கதையின் நாயகியாகவும், திரைக்கதைக்கு அச்சாணியாகவும் இவரே விளங்குகிறார். மழலையாக இவர் பேசுவது மட்டுமே இடறுகிறது. மற்றபடி சவுந்தர்யா விட்டுவிட்டுப் போன இடத்தை இவரே நிரப்பப் போகிறார். வழக்கம் போல் சமந்தா, ஸ்வீட். ஜெயசுதாவின் அனுபவம் வாய்ந்த நடிப்பு அம்மா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறது என்றால், ரோகிணி அட்டாங்கடியின் பண்பட்ட ஆளுமை பாட்டி கேரக்டருக்கு வலு சேர்க்கிறது. பார்த்துப் பார்த்து கண்கள் பூக்கும் அளவுக்கு மறைந்த எஸ்.வி.ரங்காராவின் இடத்தை அனாயாசமாக நிரப்பியிருக்கிறார், பிரகாஷ் ராஜ். கே.வி.குகனின் ஒளிப்பதிவும், மார்தாண்ட் கே.வெங்கடேஷின் படத்தொகுப்பும், மணி சர்மாவின் பின்னணியும் படத்துடன் பயணித்திருக்கின்றன. மிக்கி ஜெ மேயரின் பாடல்கள் படத்துக்கு ப்ளஸ்.
ஆனால், இத்தனை கலைஞர்களை யும் தாண்டி கம்பீரமாக நிற்பவர், படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் அடாலாதான். ஹைக்கூ ஷாட்களும், கவிதை காட்சிகளுமாக அசர வைக்கிறார். கோதாவரி வட்டார மொழியில் இவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஜீவன். ‘ஐதராபாத்துல எங்க?’, ‘ஐதராபாத் எங்க இருக்கோ அங்க!’ மாதிரி அனைத்துமே ஒன் லைனர். கிளைமாக்சில் தன் இரு மகன்களுக்கும் நடுவில் அமர்ந்தபடி ‘மனுஷங்க எல்லாருமே நல்லவங்கதான்... அவ்வளவு ஏன், மனுஷனா பொறந்தாலே அவன் நல்லவன்தான்...’ என பிரகாஷ் ராஜ் கண்களால் சிரித்தபடி பேசும் கட்டம் ஒரு சோறு பதம்.
காலம் மாறி விட்டது, நாகரீகம் வளர்ந்து விட்டது என்ற நினைப்புடன் எதையோ அடைவதற்காக கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். உறவுகளை உதாசீனப்படுத்துகிறோம். இதனால் எதை நாம் இழந்து வருகிறோம் என்பதை முகத்தில் அறைந்து உணர்த்தியிருக்கிறது, ‘சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு’.
உண்மைதான். இல்லங்களில் உறவு என்னும் மல்லிகைக் கொடி செழித்துப் படர, பணமல்ல பரஸ்பர அன்பே உரம் போடுபவை. இதைதான் இந்தப் படம் வலியுறுத்துகிறது. இதையேதான் காட்சி வடிவிலும் பதிய வைத்திருக்கிறது. அதனாலேயே மொழி புரியாவிட்டாலும் இப்படம் தமிழக மக்களை வசியம் செய்திருக்கிறது.