விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. இன்று மாலை முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. இதில் ஒரு முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது. இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தில் பல காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டதால், படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களாக இந்தப் படம் தொடர்பான
சர்ச்சை உச்சபட்ச பிரச்சினையாக மீடியாவில் வலம் வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் உள்ள ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க கமலுக்கு சம்மதமென்றால் படத்தை வெளியிட அரசு உதவும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளுடன் சமாதானம் பேச ஆரம்பித்துள்ளனர். கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனும், இயக்குநர் அமீரும் இஸ்லாமிய அமைப்புகளுடன் முதல்கட்ட பேச்சுகள் நடத்திவிட்டனர். இன்று மாலை நட்சத்திர ஓட்டலில் முத்தரப்பு பேச்சு நடக்கிறது. இதில் 24 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், கமலின் அண்ணன் சந்திரஹாஸன், அமீர் மற்றும் தமிழக அரசின் சார்பில் உள்துறைச் செயலர், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தை தமிழக அரசே ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபத்திலிருந்து 30 நிமிடக் காடசிகளை நீக்க இஸ்லாமிய அமைப்புகள் கோருவது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலர் சந்திப்பு இதனிடையே கமலின் அண்ணன் சந்திரஹாஸனை இன்று தமிழக உள்துறைச் செயலர் சந்தித்துப் பேசினார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தார் சந்திரஹாஸன்.
விஸ்வரூபம் படத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டினால்தான் இணக்கமான முடிவை எட்ட முடியும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் சொல்வதுபோல வெட்டினால் 30 நிமிட காட்சிகளை தூக்கி எறிய வேண்டியிருக்கும். படத்ததில் ஆப்கன் குழந்தைகள் கைகளை துப்பாக்கியைப் பயன்படுத்துவது போல பாவித்து விளையாடுவது, மனித வெடிகுண்டு கடைசியாக தொழுவது, குரான் ஒலிப்பது, உமர் முல்லா வசனங்கள் போன்றவற்றை முழுமையாகவே நீக்குமாறு கூறியுள்ளனர் இஸ்லாமிய தலைவர்கள். இதுபோல் முஸ்லிம்கள் தொழுகை செய்வதிலும் சில முரண்பட்ட காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றையும் நீக்கச் சொல்கிறார்கள். கமல் சார்பில் அவரது அண்ணன் பேசினாலும், காட்சிகளை வெட்டுவதில் இறுதி முடிவெடுக்க கமல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறாராம். அப்படியென்றால் இந்த பேச்சுவார்த்தையில் அர்த்தம் இல்லையே. அவரை முதலில் வரச்சொல்லுங்கள். பிரச்சினையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர எங்களுக்கல்ல, என்று தெரிவித்துள்ளனர் இஸ்லாமிய அமைப்பினரும், இந்த பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கும் அதிகாரிகளும். இரு தரப்பினருக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் ஒரிரு நாட்களில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.