
விஸ்வரூபம் திரைப்படம் சுமூகமான முறையில் வெளியாவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் படம் தியேட்டர்களை வெள்ளிக்கிழமைதான் தொட்டுப் பார்க்கும் என்று கமல் தரப்பில் கூறப்படுகிறது.
விஸ்வரூபம் தொடர்பான சர்ச்சை நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் கோரிய சர்ச்சைக் காட்சிகளின் ஆடியோவை மட்டும் ஆப் செய்து விட கமல்ஹாசன் ஒப்புக் கொண்டார். இதை இஸ்லாமிய அமைப்புகளும் ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து தற்போது படத்தை சுமூகமான முறையில் வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கமல் தரப்பும், அரசுத் தரப்பும் தொடங்கியுள்ளன.
144 தடை நீக்கம் : முதலில் படம் வெளியிடுவதற்குத் தடையாக இருந்த 144 போலீஸ் தடை உத்தரவை நீக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு போயுள்ளதாம். இதுதொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் போயுள்ளது.
தமிழக வரலாற்றில் சமீபகாலத்தில் ஒட்டுமொத்தமாக அத்தனை மாவட்டங்களிலும் ஒரு சினிமாப் படத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்த்கது.
அடுத்து கமல்ஹாசன் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். அதேபோல தமிழக அரசும் அப்பீல் மனுவை வாபஸ் பெற வேண்டும். இந்த இரண்டையும் உயர்நீதி்மன்றத்தில் நாளை செய்வார்கள் என்று தெரிகிறது.
விஸ்வரூபம் படத்தில் 7 காட்சிகளை எடிட் செய்து, அதாவது ஆடியோவை முற்றிலும் நீக்கிவிட கமல்ஹாசன் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இந்தப் பணியை இந்தியாவில் செய்ய முடியாதாம், அமெரிக்காவில்தான் செய்ய முடியுமாம்.
விஸ்வரூபம் முற்றிலும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும், அதி நவீன ஆடியோ முறையிலும் உருவாகியிருப்பதால் அதன் எடிட்டிங் வேலைகளை அமெரிக்க லேபில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த வேலைகள் எல்லாம் முடிய சில நாட்கள் ஆகும் என்பதால் படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.