செவ்வாய் தோஷம் பலன்களும் பரிகாரங்களும்


செவ்வாய் தோஷம் - பலன் தரும் பரிகாரங்கள் பராசக்தி சிவனை நோக்கி கடும் தவம் செய்யும்போது, தவ உக்கிரத்தின் வெளிப்பாடாக மண்ணில் விழுந்த அன்னையின் வியர்வைத் துளியில் இருந்து செவ்வாய் தோன்றினார். பராசக்தி தேவியால் வளர்க்கப்பட்டு தக்க வயதில் பரத்வாஜ முனிவரிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டார்.

64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அவந்தி தேசத்திற்கு மன்னனாகி சக்தி தேவியை செவ்வாய் திருமணம்
கொண்டார். தனது தவ வலிமையால் விநாயகப்பெருமானின் அருள் பெற்று, வானத்தில் செஞ்சுடர் ஒளியுடன் கூடிய செவ்வாய் கிரகமாகி நவக்கிரகமாக பரிபாலனம் செய்து வருகிறார். செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.

எனவே ரத்த அணுத் தொடர்பில் வம்ச விருத்திக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார். இதனால் தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது. ஜாதகத்தில் 7 அல்லது 8-ல் செவ்வாய் இருக்க கடுமையான செவ்வாய் தோஷம் உண்டாகிறது. 

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக் கூடாது என சோதிடம் கூறுகிறது.

லக்கனம், சந்திரன், சுக்கிரன், முதலியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். அப்படி மீறித் திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.

2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். குரு, சூரியன், சனி, சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை. சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது. சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

2-வது இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. 4-ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. 7-ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. 8-ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.

பெண்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள் கெட்டிருந்தாலும் லக்கினாதிபதி, 7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும், 12-ம் இடத்தில் ராகு, 6-ம் இடத்தில் கேது அமையப்பெற்ற பெண்களும், 7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் பாதிப்பு ஏற்படும்.

பலன் தரும் பரிகாரங்கள்:

துவரை தானம்: உடைக்காத முழுத்து வரையை சிகப்புத் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் சிவந்த கண்களையுடைய ஏழைகளுக்கு `தானம் கொடுக்கவேண்டும்.

வாழைப்பூத் தானம்: முழு வாழைப்பூ, அதே மரத்தில் காய்ந்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக்கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்து தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமர செய்து வெற்றிலை பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமண தடங்கலை தீர்த்து வைக்கும் தானங்களாகும்.

பரிகார காலம்: செவ்வாய்க்கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகார பூஜை செய்வது சிறப்பு. பொதுவாக செவ்வாய் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம்.

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

சுப்பிரமணியசுவாமி-சென்னிமலை-(ஈரோடு),
சங்கமேஸ்வரர்-பவானி-(ஈரோடு),
அமிர்தகடேஸ்வரர்-மேலக்கடம்பூர்-(கடலூர்),
வீரபத்திரர்-அனுமந்தபுரம்-(காஞ்சிபுரம்),
கந்தசுவாமி-திருப்போரூர்-(காஞ்சிபுரம்),
கல்யாண கந்தசுவாமி-மடிப்பாக்கம்-(சென்னை),
அகஸ்தீஸ்வரர்-வில்லிவாக்கம்-(சென்னை),
தேனுபுரீஸ்வரர்-திருப்பட்டீசுவரம்-(தஞ்சாவூர்),
அருணஜடேசுவரர்-திருப்பனந்தாள்-(தஞ்சாவூர்),
கைலாசநாதர்-கோடக நல்லூர்-(திருநெல்வேலி),
அகோர வீரபத்திரர்-வீராவாடி-(திருவாரூர்),
வைத்த மாநிதி பெருமாள்-திருக்கோளூர்- தூத்துக் குடி),
விருப்பாச்சி ஆறுமுக நயினார்- தீர்த்த தொட்டி-(தேனி),
வைத்திய நாதர்-வைத்தீசுவரன் கோவில்-(நாகப் பட்டினம்), விருத்தபுரீஸ்வரர்-திருப்புனவாசல்-(புதுக்கோட்டை),
நாகம்மாள்-கெங்கமுத்தூர்,
பாலமேடு-(மதுரை),
திருவாய்புடையார்- செல்லூர், (மதுரை),
பிரளயநாதசுவாமி-சோழவந்தான்-(மதுரை),
சுப்பிரமணியர்-காங்கேயநல்லூர்-(வேலூர்).

செவ்வாய் தோஷம் நீங்க: செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு செப்பு அல்லது வெள்ளியில் மாங்கல்யம் தயாரித்துக் கொள்ளவும், வளர்பிறையில் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை  நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன்பு மஞ்சள் கயிற்றில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் அணியவும்.

செவ்வாய்க்கிழமை முழுவதும் கழுத்தில் இருக்க வேண்டும். மறுநாள் காலை நீராடி விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு தெய்வத்தை  வணங்கி மாங்கல்யத்தை கழற்றி ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் சேர்ப்பித்து விடவும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்யவும். இவ்விதம் செய்ய விரைவில் திருமணம் நடை பெறும்.

போலி திருமண பரிகாரம்: செவ்வாய் தோஷத்தை விரட்ட, போலியாக ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாழைக் கன்று, தர்ப்பை புல், நவதான்யம், மஞ்சள் குங்குமம், பாக்கு வெற்றிலை, பூ-பழம்- தாலிக் கயிறு, இரு மாலைகள் இவற்றைக்கொண்டு உண்மையில் திருமணம் செய்விப்பது போல் திருமணம் செய்விக்க வேண்டும்.

தாலியை பல பேரிடம் ஆசி வாங்கி வாழை மரத்திற்குக் கட்ட வேண்டும். வாழை மரத்திற்கு மாலை அணிவித்து மூன்று முறை மாலை மாற்றிக்கொண்டு பிறகு நவதான்யம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து ஒரு அரிவாளால் மணமகளைக் கொண்டு அவ்வாழைக் கன்றை எட்டு துண்டுகளாக்கி நீர்நிலையில் எறிந்துவிட வேண்டும்.

இப்படி செய்யும் நாள் ஒரு திருமண நாளாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் கூடும். சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு இளம் சிவப்பு நிற துணியை அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வரவேண்டும். இவ்வாறு 9 செவ்வாய்க் கிழமைகளில் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget