தமிழ் புத்தாண்டு விஜய வருட பொது பலன்கள்


நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு
இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. 

இந்த வருடம் இப்படித்தான்;
விஜய வருஷத்திய பலன் வெண்பா

"மண்ணில் விசய வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங்க ளெங்குமே நண்ணும்
பயம்பெருகி நொந்த பரிவாரமெல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு".

மேற்கண்ட இடைக்காடர் என்ற சித்தர் பெருமானின் பாடலின் படி இந்தாண்டு மழை அதிகம் பொழியும். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, உளுந்து, கொள்ளு, மொச்சை, பச்சை பயிறு உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் புஞ்சை, நஞ்சை தானியங்களும் நன்கு விளையும். என்றாலும் மக்கள் இரத்த பந்தங்களிடமிருந்து விலகி நிற்பர். மனதில் ஒருவித அச்சம் இருக்கும் எனக் கூறியுள்ளார். 

இந்த வருடத்தின் ராஜாவாக குரு வருவதால் கோவில் சொத்துக்களை காப்பாற்ற அறநிலையத்துறையால் புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்படும். ஆன்மிகவாதிகள், வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றுபவர்கள், வேத விற்பன்னர்கள், ஸ்தபதிகள் கௌரவிக்கப்படுவார்கள். இயற்கை வளம் பெருகும் விதத்தில் மழை பொழியும். பசுக்கள் நன்கு பால் சுரக்கும். மந்திரியாக சனி வருவதால் சில இடங்களில் மழை குறையும். தானியங்கள், காய்கறி விலை குறையும். மக்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவர். முதன்மை பதவி வகிப்பவர்களுக்கும், இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கும் இடையே ஈகோ பிரச்னை ஏற்படும். 

உளவாளிகள் அதிகரிப்பார்கள். பதுக்கல் பொருட்கள் கண்டறியப்படும். விமானத் துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களை எளிதாக கண்டறிவார்கள். போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். வருமானத் துறையினரின் திடீர் சோதனையால் வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கூடும். உலகெங்கும் ஆட்சிப்புரிபவர்கள் மக்களை திருப்திபடுத்த முடியாமல் தவிப்பார்கள். குரு மிதுனத்தில் அமர்வதால் ஜூன் மாதத்திலிருந்து மின்சார தட்டுப்பாடு நீங்கும். சேனாதிபதியாக சுக்ரன் வருவதால் இராணுவம் பலப்படும். புது ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் பல போர் தளவாடங்கள் இராணுவத்தில் சேர்க்கப்படும். கப்பற்படை நவீனமயமாகும்.

ஆர்க்கிடெக்ட், மெரைன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மக்களிடையே போலிக் காதலும், காமமும் அதிகரிக்கும். அர்க்காதிபதியாக சுக்ரன் வருவதால் ஆபரணங்கள் விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். வெள்ளி விலை உயரும். கண்ணாடி, சிமெண்ட், மின்னணு சாதனங்கள், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். மேகாதிபதியாகவும் சுக்ரன் வருவதால் விடியற்காலை நேரத்தில் மழை அதிகம் பொழியும். அணைகள் நிரம்பும். மலைப் பிரதேசங்களில் மண் சரிவால் பாதிப்பு ஏற்படும்.

மக்களின் ஆரோக்‌கியம் கூடும். இரசாதிபதியாக குரு வருவதால் மதுபானங்களின் விலை உயரும். மிளகு, ஏலக்காய், முந்திரி இவைகளின் விலை உயரும். சர்க்கரை விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். ஸஸ்யாதிபதியாக செவ்வாய் வருவதால் பால், நெய் உற்பத்தி அதிகரிக்கும். தான்யாதிபதியாக சூரியன் வருவதால் சிவப்பு, வெள்ளை தானியங்கள் நன்கு விளையும். நீரசாதிபதியாக செவ்வாய் வருவதால் சந்தனம் உள்ளிட்ட மலையகப் பொருட்கள் பவழம், முத்து உள்ளிட்ட கடல் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

லக்னாதிபதி சனி உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் இந்தியா தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிக்கும். உழைப்பாளி கிரகம் சனியுடன் மாயா ஜால கிரகம் ராகு சேர்க்கை பெற்று நிற்பதால் வெற்றுப் பேச்சு, பொய்யான உறுதி மொழிகள் அதிகரிக்கும். உண்மையான பாசம், ஆத்மார்த்தமான நட்பு, உறவுகள் குறையும். மக்கள் அசல் எது, போலி எது என்பதில் குழம்புவார்கள். உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களில் கலப்படம் அதிகரிக்கும். பூச்சித் தொல்லையால் விவசாயம் பாதிக்கும். உரம் விலை உயரும். வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். சிறுபான்மை இனத்தவர்கள் கல்வி மற்றும் அரசு பதவிகளில் முன்னேறுவார்கள்.

அரசியல்வாதிகள் நவீன முறையில் ஊழல் புரிவர். தீவிரவாதிகளின் கை ஓங்கும். அதிகார மையத்தின் மறைமுக ஆதரவால் தவறு செய்பவர்கள் தப்பிப்பார்கள். வருடம் பிறக்கும் போது சனியும், செவ்வாயும் சம சப்தமமாகப் பார்ப்பதால் பாகிஸ்தான், சீனா, இலங்கை தூண்டுதலால் நம் நாட்டில் கலகமும், கலாச்சார, பொருளாதார சீரழிவும், குண்டு வெடிப்புகளும் நிகழும். காவல் துறைக்கும், ராணுவத்திற்கும் ஓய்வு இருக்காது. நாட்டின் எல்லையில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கும். எதிரெதிர் கிரகங்களான சனி உச்சம் பெற்றும், செவ்வாய் ஆட்சிப் பெற்றும் சமசப்தமாய் மோதிக் கொள்வதால் எங்கும் போராட்டங்களும், உண்ணாவிரதங்கள், கடையடைப்பு, தற்கொலைப் படை தாக்குதல்களும் அதிகரிக்கும்.

உலகெங்கும் ஆள்பவர்கள் எதிர்கட்சிக்காரர்களை திசை திருப்ப சில பகுதிகளில் கலகத்தை தூண்டிவிடுவர். பொதுத் தேர்தல் முன்னரே வரும். அரிதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகும். ஜனநாயகம் விலை போகும். நாட்டில் நிகழும் சட்ட, விதி மீறல்கள், பாலியல்பலாத்காரங்கள், மனித நேயமற்ற செயல்கள் மற்றும் பாரபட்சமான தீர்ப்புகளால் இந்தியாவின் மீதுள்ள மதிப்பு, மரியாதை உலக நாடுகள் மத்தியில் குறையும். பேசித் தீர்க்க வேண்டிய சாதாரண விஷயத்திற்கெல்லாம் ஈகோ பிரச்னையால் மக்கள் வழக்குத் தொடுப்பார்கள். நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சில்லரைத் தனமாக நடந்துக் கொள்வார்கள். வதந்திகள் அதிகரிக்கும்.

சர்க்கரை நோய், கேன்சர், இருதய நோய், நுரையீரலில் தண்ணீர் சேர்தல் போன்ற நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள். அனைத்துத் துறையிலும் ஊழலும், பழி வாங்கும் குணமும் அதிகரிக்கும். தோல் நோய் பரவும். கொசு, நாய், பாம்புத் தொல்லை அதிகமாகும். பெண் ஆதிக்க கிரகமான சந்திரன் மற்றொரு பெண் ஆதிக்க கிரகமான சுக்ரனின் வீட்டில் உச்சமானதால் பெண்களுக்கு ஆதரவான திட்டங்கள் உலகெங்கும் நடைமுறைக்கு வரும். ஆனால் சந்திரன் சூரியனின் நட்சத்திரத்தில் நிற்பதாலும், மற்றொரு பெண் ஆதிக்க கிரகமான சுக்ரன் செவ்வாய், சூரியன், கேது ஆகிய கிரங்களுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றதால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும். மதமாற்றம் அதிகமாகும். வாகன விபத்துகள் அதிகரிக்கும். மக்களிடையே வக்ர புத்தியும், மன நிம்மதியற்ற போக்கும், குறுக்கு புத்தியும் அதிகமாகும். ஜூன் மாதத்திலிருந்து வங்கிகள் நலிவடையும். தங்கம் விலை குறையும்.

புதன் நீசமாகி இருப்பதால் மாணவர்கள் மத்தியில் பொது அறிவு, நுண்ணறிவு குறையும். பணத்தை மனதில் கொண்டு படிக்கும் குணம் அதிகமாகும். தாய்மொழிப் பற்று, நாட்டுப் பற்று குறையும். செவ்வாய் சனியின் பார்வை பெறுவதால் நிலம் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். அயல்நாட்டு மோகம் குறையும். சேமிக்கும் குணம் குறையும்.

இந்த விஜய வருடம் மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை குறைப்பதாகவும், சுக போகங்களை அனுபவிக்க தூண்டுவதாகவும் கடந்த வருடத்தை விட மகிழ்ச்சியையும், ஆனால் மனதில் ஒருவித அச்சத்தையும் தருவதாக அமையும். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget