நடிகர்கள்: அர்ஜுன், சேரன், விமல்,சுர்வீன், லாசினி, பானு,தம்பி ராமையா,அப்புக்குட்டி, சத்யன்
இசை: யுவன்சங்கர்ராஜா
இயக்கம்: வஸந்த்
தயாரிப்பு: எம்.ஜி.பரத்குமார், பி.ஏ.மகேந்திரன், மகா அஜய் பிரசாத்
காதல் என்பது கேட்கிறதில்லை, விட்டுத் தர்றது. காதலைப் பற்றிய வஸந்தின் இந்த விளக்கம்
தான் மூன்று பேர் மூன்று காதல். பெயரில் இருப்பது போல் மூன்று காதல்கள். அதில் கடலும் கடல் சார்ந்த சேரன், பானு காதல் கதை மட்டும் தேறுகிறது. கொள்கைக்காக திருமணம் செய்யாமலிருக்கும் சேரன், அவரை ஒருதலையாக காதலிக்கும் பானு. பானுவின் புதிய தோற்றமும் இயல்பான நடிப்பும் அட போட வைக்கிறது. சேரனும் சோகத்தை பிழியாமல் காப்பாற்றுகிறார். பின்னணி இசை, பாடல் என்று இவர்களின் காதலில் மட்டும் எல்லாமே சோபிக்கிறது.
அர்ஜுன், சுர்வீன் காதல் ஒட்டவில்லை. அங்கிள் ஒருவர் அழகான இளம் பெண்ணை காதலித்தால் எப்படி மனம் ஏற்றுக் கொள்ளும்? தனது காதலி இப்போது வருவார் என கிளைமாக்ஸில் அர்ஜுன் சொல்லும் போது அனைவரும் கிளாப்ஸ் செய்ய, மீடியா அவரை படம் பிடிக்க ஓடுகிறது. பழைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்து ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்று புத்தக வெளியீட்டுக்கு வந்தவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், மீடியாவுக்குமா?
இந்த இரண்டு காதல் கதைகளையும் கோர்க்க மட்டுமே விமலின் காதல் பயன்படுகிறது. இந்த இரு ஜோடிகளின் காதல்தான் நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாததற்கு காரணம் என்று டயலாக்கில் கடந்துவிடுகிற போர்ஷனுக்கு முக்கால் மணி நேரம் வீணாக செலவளித்தது படு அபத்தம். ஓரங்க நாடகம் பார்ப்பது போலிருக்கிறது விமல், லாசினி காதல். மொத்த ஊட்டியில் இவர்கள் இரண்டு பேர்தான் இருக்கிறார்களா? பரந்த புல்வெளியின் நட்ட நடுவில் நின்று பேசுகிறார்கள். சத்யனுடன் பேசும் போதும் அதே வெட்டவெளி புல்தரை. ஒரு டீக்கடை... ஒரு பஸ் ஸ்டாண்ட்... ம்ஹும்.
நேர்கோட்டு கதையை முன் பின்னாக நகர்த்தி நான் லீனியரில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். முக்கியமான காட்சியில் இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தால் பரவாயில்லை. படம் தொடங்கியது முதல் எல்லா காட்சிக்கும் இப்படி பின்னோக்கிப் போவது படத்தின் மிகப்பெரிய செட்பேக். முந்தையப் படம் சத்தம் போடாதேயில் தொடங்கிய இந்த கோளாறு இதில் முழுவீச்சில் வெளிப்படுகிறது (கிளைமாக்ஸில் மட்டும் - லாஜிக் இல்லை என்றாலும் - இந்த யுக்தி ஓரளவு ஆப்டாக பொருந்துகிறது).
படத்தின் முதல் ஷாட்டில் வருடத்தை காண்பித்து அடுத்த ஷாட்டில் மாதத்தை காண்பித்து அதற்கடுத்து தேதியை காண்பித்து... அப்போதே டயர்டாகிவிடுகிறோம். வருடம், மாதம், தேதியெல்லாம் ஒரே ஷாட்டில் காண்பித்தால் என்ன? படத்தின் மிகப்பெரிய ட்ராபேக்கே இதுதான். நிறுத்தி நிதானமாக ஜவ்வாக கதையை இழுத்திருக்கிறார். துண்டு துண்டாக வரும் காட்சியில் பின்னணி இசை சேர்க்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் யுவன்.
விமல், லாசினி எபிசோடில் திரும்பத் திரும்ப வரும் தீம் இசை எரிச்சல். பானுவின் பாடல் தவிர்த்து மற்றவை தவறான பிளேஸ்மென்ட்ஸ், தனியாக கேட்கையில் கிடைக்கும் அனுபவம் மிஸ்ஸாகிறது. பாடல் காட்சியில் எடிட்டரின் விளையாட்டு வேறு எரிச்சலை கிளப்புகிறது. ஒளிப்பதிவுதான் ஒரே ஆறுதல்.
விமல், அர்ஜுன் இருவரும் தவறான தேர்வு. மேக்கிங்கில் நான் லீனியரை முடிந்தளவு தவிர்த்திருக்கலாம். படம் முழுக்க காலாவதியான வசனங்கள். வஸந்தா இப்படி எழுதியிருக்கிறார்?
லத்தீன் அமெரிக்க படங்களின் நான் லீனியர் ஹேங்ஓவரிலிருந்து விடுபட்டு கேளடி கண்மணி எடுத்த தனது ஒரிஜினல் பாணிக்கு மாறினால்தான் பழைய வஸந்தை பார்க்க முடியும்.
இரண்டு பேர் இரண்டு (அரைகுறை) காதல்.