அன்னக்கொடி சினிமா விமர்சனம்

நடிகர் : லட்சுமணன், மனோஜ்
நடிகை : கார்த்திகா
இயக்குனர் : பாரதிராஜா
இசை : ஜீ.வி.பிரகாஷ்
ஓளிப்பதிவு : சாலை சகாதேவன்

கதாநாயகன் லட்சுமணன் ஆடு மேய்க்கும் இளைஞன். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் மனோஜின் தந்தை.
வட்டிக்கு பணம் வாங்குபவர் பணம் செலுத்தாவிட்டால் அவரது மனைவியை இழுத்துக்கொண்டு போகும் கொடூர மனம் கொண்டவர். இவரது மகனாக வருபவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் லட்சுமணனின் ஆட்டு மந்தையில் உள்ள ஆட்டை திருடிச் சென்று விடுகிறார். இதனால் இவர்களுக்குள் பகை உண்டாகிறது.

கதாநாயகி கார்த்திகாவும் ஆடு மேய்க்கிறார். பக்கத்து ஊரான இவருக்கும், லட்சுமணனுக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த காதலுக்கு எமனாக வருகிறார் மனோஜ். வட்டி பணத்தை வசூல் செய்ய கார்த்திகா வீட்டுக்குச் சென்ற மனோஜ் அவரது அழகில் மயங்கி அவரை அடைய நினைக்கிறார்.

இதற்கிடையில் கார்த்திகாவின் அம்மா சாராயம் வியாபாரம் செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் போலீசார் கார்த்திகாவையும், அவரது அம்மாவையும் கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்கிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மனோஜ், போலீசாருக்கு பணம் கொடுத்து இருவரையும் விடுவித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது கார்த்திகாவின் காதல் விவகாரத்தை அவரது அம்மாவிடம் போட்டு கொடுக்கிறார். இதனால் லட்சுமணன் மீது கார்த்திகா அம்மா கோபத்தில் இருக்கிறார்.

இந்தநிலையில் லட்சுமணனும், அவரது தந்தையும் கார்த்திகாவை பெண் கேட்க செல்கிறார்கள். அங்கே கார்த்திகாவின் அம்மா,  லட்சுமணன் மற்றும் அவரது தந்தை மீது சாணத்தை கரைத்து ஊற்றி அவமானப்படுத்துகிறார். இந்த களேபரத்தின் உச்சகட்டமாக கார்த்திகாவின் அம்மா லட்சுமணனின் அப்பாவை அடிக்க, கோபத்தில் லட்சுமணன் கார்த்திகாவின் அம்மாவை எட்டி உதைக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த கார்த்திகா அம்மா, மனோஜ் உதவியுடன் போலீசில் புகார் செய்கிறார். அங்கு லட்சுமணனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், அவனது தந்தைக்கு 2 நாள் தண்டனையும் கிடைக்கிறது. தண்டனை முடிந்து வெளியே வந்த லட்சுமணனின் தந்தை, மனோஜ் தந்தையிடம் வட்டிக்குப் பணம் வாங்கி தனது மகனை ஜாமீனில் எடுக்கிறார். 

வெளியில் வந்து லட்சுமணன் கார்த்திகாவை கைப்பிடித்தாரா? கார்த்திகாவை அடைய முயன்ற மனோஜ் எண்ணம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

கதாநாயகனாக லட்சுமணன் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமே என்று தெரியாத அளவிற்கு கிராமத்து இளைஞர் வேடத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 'கோ' படத்தில் பார்த்த கார்த்திகாவா இது? என்று கேட்கும் அளவிற்கு பட்டிக்காட்டு பெண் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

10 வருடங்களுக்குப்பின் பாரதிராஜா தன் மகன் மனோஜை வில்லனாக களம் இறக்கியிருக்கிறார். கார்த்திகா மற்றும் மனோஜியின் நடிப்பு படத்திற்கு பலம்.

ஜீ.வி. பிராகாஷ் இசையில் உருவாகிய பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார்.

சாலை சகாதேவன் தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய படம். உண்மைக் கதையை தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுக்க முயற்சித்திருக்கிறார். இருந்தாலும், அவரது பழைய படங்கள் மாதிரியே செல்கிறது. திரைக்கதையில் தொய்வு.

அன்னக்கொடி மொத்தத்தில் அரைக்கம்பம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget