இணையத்தில் தினம் தினம் புதியவற்றை கற்றுக் கொள்வது எப்படி?

இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும். இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம்; அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.

இணையத்தில் கற்றுக் கொடுக்கும் தளங்கள் பல இருந்தாலும், கீழே மிக அதிகமானோர் பயன்படுத்தும் தளங்களாக ஆறு தரப்பட்டுள்ளன. நீங்கள், இதுவரை இவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக இவற்றைக் கண்டு, தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்பது உறுதி. அவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஐ ட்யூன்ஸ் (iTunes): இணையத்தில், தகவல்களைப் படிப்பதைக் காட்டிலும், கேட்பதனை நீங்கள் விரும்பினால், உங்களுக்கேற்ற தளம் ஐ ட்யூன்ஸ். இங்கு பலவகையான கற்றுக் கொள்ளும் கல்வி சார்ந்த பாட்காஸ்ட் (podcast) எனப்படும் கல்வி வீடியோக்கள் உள்ளன. ஒரு புதிய மொழி கற்றுக் கொள்ள வேண்டுமா, தற்காப்புக் கலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா, புகைப்படக் கலை, நிதி நிர்வாகம் -- இப்படிப் பல வகையான பாட வீடியோக்கள் இங்கு கிடைக்கின்றன. இவை எல்லாமே கல்வி என்பதன் கீழ் தரப்படவில்லை. எனவே நீங்கள் விரும்புபவற்றைத் தேடல் மூலம் தெரிந்து கொண்டு, பயன்படுத்துவது எளிதாக அமையும். ஆர்வமூட்டி நம்மை அசத்தும் பல விஷயங்கள் iTunes U என்ற பிரிவில் பார்க்கலாம். இந்த கல்வி வீடியோக்கள் அனைத்தும் இலவசமே. இவற்றை ஸ்டான்போர்ட், யேல், ஹார்வேர்ட் போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் தயாரித்து வழங்கியுள்ளன. உங்களிடம் ஐபோன், ஐபாட் அல்லது ஐபேட் இருந்தால், இவற்றைப் போகிற போக்கில் பெற்று, பயன்படுத்தலாம்.

2. ரெட்டிட் (Reddit): புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள, வெகு எளிதான வகையில், வழியில் விஷயங்களைத் தரும் தளமாக ரெட்டிட் இயங்குகிறது. அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ள ஓர் இணைய தளம் இது என அறிவித்து, உலகின் பல்வேறுமுனைத் தகவல்களை இத்தளம் தருகிறது. இங்கு கிடைக்கும் தகவல்கள் அடங்கிய வீடியோ பைல்களைப் போல வேறு எங்கும், ஹார்ட்வேர்ட் பல்கலை தளம் உட்பட, கிடைக்காது. ஆர்வமூட்டி, பொழுது போக்கும் வகையில் அரிய தகவல்களைக் கற்றுத் தருவது, இந்த தளத்தில் உள்ள பல வீடியோ பைல்கள், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளன.

3. விக்கிபீடியா: இணையத்தில் கற்றுக் கொள்ளுதல் என்றால், அந்த கட்டுரையோ, பட்டியலோ, விக்கிபீடியாவினைக் குறிக்காமல் முழுமை பெறாது. பல அரிய தகவல்களின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக இது இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பிறர் அறியவும், கற்றுக் கொள்ளவும் இதில் பதிந்து வைக்கலாம். இந்த தளத்தில் கற்றுக் கொள்வதற்கான வழிகள் எனச் சிலர் கட்டுரை அமைக்கும் அளவிற்கு, இதில் அளப்பரிய தகவல்கள், வெவ்வேறு வழிகளில் தரப்பட்டுள்ளன.

4. ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ் (HowStuffWorks): வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையான வகையில் ஒன்ற அறிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் HowStuffWorks ஆகும். ""இதெல்லாமா!'' என்று நாம் எண்ணிப் பார்த்து மலைக்கவைக்கும் விஷயங்கள் குறித்து, மிக முழுமையாகத் தகவல்களைத் தருவது இத் தளத்தின் சிறப்பு. ஏதேனும் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள இதனைப் படிக்கையில், அது தொடர்பானவை குறித்து, அதே தளத்தில் சொல்லப்பட்டிருந்தால், அவற்றிற்கு லிங்க் தரப்படுவது இதன் சிறப்பு. அத்துடன், கட்டுரையின் இறுதியில், நாம் மேலும் பார்க்க வேண்டிய இணையதளங்களையும் பட்டியல் இட்டு, நம் கற்றலை ஒரு தொடர்கதையாக இந்த தளம் நீட்டிக்கிறது. நாம் தேடிப் பெறும் வகையில் இது பல பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.

5. இன்ஸ்ட்ரக்டபிள்ஸ் (Instructables): உங்கள் கரங்களை அழுக்காக்கிக் கொண்டு ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது. செயல்முறைகளை நேரடியாக இந்தத் தளம் கற்றுக் கொடுக்கிறது. உணவு தயாரிக்கும் முறை, சிறிய கலைப் பொருள் தயாரித்தல், ஆபரணங்களை வடிவமைத்தல், கைவினைப் பொருள் தயாரித்தல், தோட்டக்கலை என இந்த தளம் தரும் வகை வகையான செயல்பிரிவுகள் நீள்கிறது. உங்கள் கற்றலைத் தூண்டும் வகையில், பல போட்டிகளையும் இந்த தளம் தருகிறது. இந்த போட்டிகளில் வெற்றிகரமாகப் பங்கு பெற்றால், பரிசுகளும் தரப்படுகின்றன.

6. கான் அகடமி (Khan Academy): விக்கிபீடியா தளத்தைப் போல அரிய பல தகவல்களைக் கொண்டு இந்த தளம் இயங்குகிறது. இதில் 4,100 வீடியோக்களுக்கு மேலாகப் பதியப்பட்டுக் கிடைக்கின்றன. எல்லாவகை கல்விப் பிரிவுகளிலும் வீடியோக்கள் கிடைக்கின்றன. மேத்ஸ், பிசிக்ஸ், நிதி, சரித்திரம் என வகை வகையான பிரிவுகளில், இவை அமைக்கப்பட்டுள்ளன. நூறு வகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பதியப்பட்டுள்ளன. உங்களுக்கு எந்த கல்வி அல்லது திறன் பிரிவில் தகவல் வேண்டுமோ, அதனைக் குறிப்பிட்டு பதிவு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, அவை குறித்த தகவல் சுருக்கமாக அனுப்பப்படும்.

மேலே குறிப்பிட்ட தளங்களுடன், இன்னும் பல தளங்கள் இது போல தகவல் களஞ்சியங்களாகவும், கற்றலுக்குப் பயன் தரும் வகையில் செயல்படுபவையாகவும் உள்ளன. இவற்றைத் தேடிப் பார்த்து நம் கற்றலை விரித்துக் கொள்வது நமக்கு நல்லதாக அமையும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget