காமெடியனை கலாய்கும் ஹீரோக்கள்

பொதுவாக சந்தானம் தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட சந்தானத்தையே சில நடிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் ஆர்யா, சித்தார்த் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஆர்யா, சந்தானத்தை நேரில் கலாய்ப்பதை விட போனில்தான் ஜாஸ்தியாக கலாய்ப்பாராம். சந்தானம் படங்களில் பேசிய டயலாக்குகளை கொண்டே, அதாவது அவர் வீசியெறிந்த பந்துகளையே அவர் மீது திருப்பி விடுகிறாராம். இதனால் ஆர்யாவின் போன் வருகிறது என்றாலே எமகண்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சே என்று அலறுகிறாராம் சந்தானம்.

ஆனால், இந்த கலாய்ப்பு விஷயத்தில் சித்தார்த் கொஞ்சம் டீசன்ட் பேர்வழியாம். சந்தானம் பேசினால் பதிலுக்கு அவரும் பேசுவாராம். ஆனால், கதாநாயகிகள் அருகில் இருந்தால் மட்டும், தான் ஹீரோவாச்சே என்று சந்தானம் ஒரு வார்த்தை பேசினால் சித்தார்த்திடமிருந்து ஒன்பது வார்த்தைகள் ஓட்டமாய் வருமாம். இதனால் சில சமயங்களில் போனால் போகட்டும் என்று சித்தார்த்துக்கு விட்டுக்கொடுத்து தான் தோற்றுவிட்டது போல் சரண்டர் ஆகி விடுவாராம் சந்தானம். அதைப்பார்த்து, இவர்களுக்கிடையே என்னதான் டீலிங்கோ, சித்தார்த்துக்காக ரொம்பதான் விட்டுக்கொடுக்கிறார் சந்தானம் என்கிறார்கள் யூனிட்வாசிகள்.

பழைய பதிவுகளை தேட