காதலை பெற்றோர் முதல் உற்றார் வரை எதிர்ப்பது ஏன்?

காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாமல் இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக கண்டதும் காதல், காணாமலே காதல், தொலைபேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம்.
இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன், ஆனால் அது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா  என்ன செய்வது? என்பது போன்ற வசனங்ளும் தமிழ் திரைப்படங்களில் தான் வாசிக்கப்படுகிறது. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு இதனையும் வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள். காதல் ஒரு உன்னதமான உணர்வு. 

காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப்பூர்வமாக தான் அறிய முடியும். மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பது காதல். இதுபோல காதலை தலையில் தூக்கி கொண்டாடுபவர்கள் பலர். ஆனால், காதல் ஒரு வலி. 

சந்தோஷமாக, உல்லாசமாக வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதனுக்கு வரக்கூடாத ஒரு உணர்வு, காதல். சரி, அப்படி என்ன காதல் மேல் இவ்வளவு கோபம் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் இருங்கள். காதலே வேண்டாம் பாஸ்... இதை விட நல்ல விஷயங்கள் உலகில் எவ்வளவோ இருக்கிறது என்ற தரப்பு நியாயத்தை வலுப்படுத்தும் 10 காரணங்கள் இதோ... 

1. காதல் ஒரு வலி 

தலை வலி, கால் வலி, முதுகு வலி போன்ற வலிகள் எல்லாம் மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால் இந்த காதல் இருக்கே, மனதை வருடி, ஏமாற்றி, பிறகு உடைத்தே விடும். இந்த வலிக்கு மருந்தே கிடையாது. இப்படி உடைந்து போன பழைய காதலை மறப்பதற்கு, நாம் படும் அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

ஏன் இப்படி காதலில் விழுகிறோம் என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணம் நம் பலவீனம் தான். காதல் செய்ய முடிவெடுத்துவிட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக காதலில் விழுந்தேன் என்று தான் சொல்வார்கள். விழுவது என்பது சுயநினைவோடு செய்யும் செயல் அல்ல, அது ஒரு விபத்து. காதலும் அப்படி தான். இந்த விபத்தில் அகப்படாமல் இருப்பதே, வாழ்க்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும். 

2. ரகசியம்

காதலில் இரு மனங்கள் ஒன்றாக கலந்து, இரு உடல் ஓர் உயிராக மாறிவிடுகின்றனர். அப்படியிருக்கும் போது, எந்த ஒரு ரகசியத்தையும் மனதுக்குள் வைத்திருக்க முடியாது. நம்மைப் பற்றி எல்லாவற்றையும் காதலரிடம் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம். 

என்ன தான் காரணம் சொன்னாலும், காதலன்/காதலி என்பவர் ஒரு வெளி நபர். நம்மைப் பற்றி, நம் குடும்பத்தைப் பற்றி, நம் ரகசியங்களைப் பற்றி, வெளி நபர் ஒருவரிடம் சொல்வது எந்தளவுக்கு நம்ப கத்தகுந்ததாக இருக்கும். நம்முடைய ரகசியங்களை வேறொரு நபருக்கு எதற்காக சொல்ல வேண்டும்? நம்முடைய பலவீனங்களை நாமே எதற்கு வெளிகாட்டி கொள்ள வேண்டும்? வேணவே வேணாம் பாஸ்... இப்படிப்பட்ட காதலே வேணாம். 

3. `மைனர் ஜாலி, மணி பர்ஸ் காலி

கொஞ்ச நஞ்சம் இருக்கும் காசும், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தே தீர்ந்து விடும். காதலரின் பிறந்த நாள் தொடங்கி, அவர் வளர்க்கும் நாய்குட்டியின் பிறந்தநாள் வரைக்கும், அனைத்துக்கும் பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் வாங்கிக் கொடுக்கணும். 

அப்போது தான் அவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க முடியும். நாம் இருக்கும் பொருளாதார நிலைமையில் இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ்? இப்படி காதலுக்காக தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை விட, நிம்மதியா 10 ரூபாய் கொடுத்து, ரோட்டு ஓர கடையில் பானி பூரி சாப்பிடுவது எவ்வளவோ மேல். கோவப்படாதீங்க... கொஞ்சம் பொறுமையாக கேளுங்க... காதலில் விழாதீங்க... 

3. மூளையை கசக்கி பிழியும்

காதலரை எப்படி ஆச்சர்யப்படுத்துவது? எந்த மாதிரி பரிசு பொருட்கள் கொடுக்கலாம்? வார இறுதியில் எங்கு அழைத்து செல்லலாம்? எந்த மாதிரியெல்லாம் செய்தால் காதலர் நம் அன்பை நினைத்து மகிழ்வார்? இப்படி யோசித்து யோசித்து, நமக்கு இருக்கும் மூளையை கசக்கி பிழிய வைக்கும் இந்தக் காதல். 

காதலுக்காக இவ்வளவு சிரமப்பட்டு சிந்தனை செய்வதற்கு பதிலாக, வேறு ஏதாவது நல்ல விஷயத்துக்கு சிந்தனை செய்தால், வாழ்வில் முன்னேற வழிவகுக்கும். ஆனால், இந்தக் காதல் நம் காலை வாரி விடவே பார்க்கும். 

4. சுதந்திரமே பறி போச்சு

இத்தனை நாட்கள் பெற்றோரின் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்திருப்போம். அது நல்லது, நம் வாழ்கையை நல்வழிப்படுத்த உதவும். ஆனால், காதலுக்குப் பிறகு, காதலரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். இவன் கிட்ட பேசாதே... 

அவள் கிட்ட பேசாதே... நீ ஏன் அவளுக்கு போன் பண்ணே நேற்று ரொம்ப நேரம் போன் பிசியாகவே இருந்ததே... யார் கிட்ட பேசினீங்க? இப்படி எல்லாவற்றிலும், நம் சுதந்திரம் போய்விடும். ஆசைப்பட்டு நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்ற இந்த காதல் நமக்கு தேவையா? 

5. சந்தர்ப்பம் விலகும்

சந்தர்ப்பங்கள் கதவு தட்டினாலும், திறக்க முடியாது ஒரு சமயத்தில் ஒருவரைத்தானே காதலிக்க முடியும். சில சமயங்களில், நமக்கு ஏற்ற துணை கொஞ்சம் காலதாமதமாக வரலாம். ஆனால், அதற்குள் அவசரப்பட்டு காதலில் விழுந்துவிடுகிறோம். 

அவ்வாறு, காதலரை விட சிறப்பான, அன்பான வேறு ஒருவர் நம் வாழ்வில் வர முயன்றாலும், அவருக்கு நோ சொல்லி அனுப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவரைக் காதலிப்பதால், இப்படிப்பட்ட நல்ல சந்தர்ப்பங்களை இழக்க வேண்டி வரும்.

6. காசு மற்றும் நேரச் செலவும் அதிகம்

நம்முடைய பொன்னான நேரத்தை காதல் வீணடிக்கும். நாம் ஒருவரை காதலிக்கும் போது, அவருக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும், பேச வேண்டும், வெளியே செல்ல வேண்டும். இது மட்டுமல்லாமல், ஓயாமல் இரவும், பகலும் காரணமே இல்லாமல் போனில் பேசிக்கொண்டிருக்க வேண்டும். 

இது போன்ற நிர்பந்தங்களால் நம்முடைய நேரம் பெரும்பாலும் காதலருக்காகவே செலவு செய்கிறோம். இதெல்லாம் நமக்கு தேவையாப இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு, டிவி சீரியல் பார்ப்பது எவ்வளவோ மேல். சண்டை, சச்சரவு இல்லாமல் பொழுது போகும். 

7. அழகு

காதலில் விழுந்தவுடன், அனைவரும் காதலரின் கண்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்று நினைப்போம். இந்த கலர் சுடிதார் போடுவதா, என்ன பொட்டு வைப்பது, கம்மல் நல்லா இருக்குமா, பூ வெச்சுக்கலாமா, வேணாமா, லிப்ஸ்டிக் போட்டா அவருக்குப் பிடிக்குமா பிடிக்காதா என தன்னை தன் காதலர் விரும்ப என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். 

ஒரு காலத்தில், தன் வெளித்தோற்றத்தைப் பற்றியெல்லாம் அதிகமாக கவலைப்படாமல் இருந்திருப்போம். ஆனால், இப்போது கதை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது பாருங்கள். கண்ணாடி முன்னாடி ஒரு மணி நேரம் நிற்க வைக்கும் இந்த காதல் தேவையா மேடம்...கொஞ்சம் யோசிச்சு பாருங்க! 

8. கனவையும் லட்சியத்தையும்

காதல் வந்தவுடன் காதலே கதி என்று சுற்றி உள்ள அனைத்தையும் புறக்கணிப்பார்கள். கேட்டால் அது ஒரு உணர்வு, அது வந்தால் அப்படித்தான் இருக்கும். சரி, அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும். 

ஆனால், இந்தக் காதலினால், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, வேலை போன்ற விஷயங்களில் நாட்டம் இல்லாமல் இருப்பது என வாழ்க்கையின் கனவையும், லட்சியத்தையும் காதலுக்கு அடகு வைக்கும் நிலைமை ஏற்படுகிறது. 

காதலுக்கு முன்னுரிமை கொடுப்பதால், வாழ்க்கையின் லட்சியங்களை அடையவிடாமல் தடுக்கிறது. இப்படி நம் வாழ்கையையே சீரழிக்கும் காதல் நமக்கு தேவைதானாப 

9. முட்டாளாக்கும் 10 நிமிடம்

காதலரை சந்திப்பது தொடர்பாக, 4 மணி நேரம் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். சிறிது சிறிதாக சேமித்த பணம் அனைத்தையும் காதலருக்கு பரிசுப் பொருட்கள் வாங்க செலவு செய்வார்கள். ஆனால், காதலில் இருக்கும் போது இதெல்லாம் தெரியாது. 

அப்படியே தெரிந்தாலும், அதை ஒப்புக்கொள்ளும் நிலையில் மனம் இருக்காது. எதைச் செய்வது முட்டாள்தனம் என்று நினைத்திருப்போமே, காதல் வந்த பின் நம்மை அறியாமலேயே அதே முட்டாளதனத்தைச் செய்வோம். என்னமோ போங்க, இவ்வளவு அவஸ்தைப்பட்டு காதல் செய்யணுமா? 

10. சின்ன அட்வைஸ்

இவை அனைத்தையும் விட, காதல் வந்ததும் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வேறு எதுவுமே செய்ய முடியவில்லை என்று சிலர் சொல்வதைத் தான் சுத்தமாக ஜீரணிக்கவே முடியவில்லை. என்னமோங்க... நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம்... இனி மேல் நீங்கள் தான் யோசிச்சு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற முடிவை எடுக்கணும்!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget