துள்ளி விளையாடு சினிமா விமர்சனம்

வருமானவரித்துறை அதிகாரிகளுக்காக பயந்து, ரூ.20 கோடியை மறைக்க நினைக்கும் அரசியல்வாதியான ஜெயபிரகாஷ், ஒரு காரில் அப்பணத்தை மறைத்து வைக்கிறார். அந்த காரை தனது டிரைவரான ஹீரோ யுவராஜியிடம் கொடுக்கிறார். காரில் பணம் இருப்பதை அறியாத யுவராஜ், காரை எடுத்துக்கொண்டு, ஊர் ஊராக சுற்ற, ஒரு கட்டத்தில் யுவராஜ் மீது சந்தேகப்படும், பிரகாஷ்ராஜியின் ஆட்கள், யுவராஜை அடித்துப்போட்டு, அதில்
உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

பிறகு, அந்த பணம் ஜெயபிரகாஷுடையது என்பதை அறியும் பிரகாஷ்ராஜ், அந்த பணத்தை ஜெயபிரகாஷுக்கு திருப்பி கொடுக்கிறார். ஆனால், அதில் ரூ.2 கோடி தான் இருக்கிறது. காரில் ரூ.20 இருந்தது என்பது பிரகாஷ்ராஜுக்கு தெரியாது, அதே சமயம் மீதமுள்ள ரூ.18 கோடியை ஹீரோ யுவராஜ் எடுத்துக்கொண்டு, தனது நண்பர்களோடு எஸ்கேப் ஆகிவிடுகிறார். தனது கார் டிரைவர் தான் பணத்தை எடுத்தார் என்பதை அறியாத ஜெயபிரகாஷ், எப்படியாவது எனது பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜை மிரட்ட, பிரகாஷ்ராஜ் பணத்தை தேடுகிறார். இதற்கிடையில் பணத்தோடு எஸ்கேப் ஆகும், யுவராஜ், நாயகி தீப்தியை சந்திக்க, இருவருக்கும் காதல், டூயட் என்று படம் நகர, இறுதியில் 18 கோடியை, யுவராஜியிடம் இருந்து பிரகாஷ்ராஜ் கைபற்றினாரா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

புதுமுகம் யுவராஜ், பக்கத்து வீட்டு பையன் போல ரொம்ப எளிமையாக இருக்கிறார். இயக்குநர் சொல்லிக்கொடுத்ததை செவ்வன செய்திருக்கும் இந்த புதுமுகத்துடன், சூரி, சென்ராயன் என்ற பழைய முகங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். படத்தின் ஹீரோ யுவராஜ் தான் என்றாலும், சூரியும், சென்ராயனும் படம் முழுக்க வருகிறார்கள்.

இந்த மூன்று பேருடையை நடிப்பும் நம்மை ரொம்பவே பாதிக்கிறது. அதுவும் சென்ராயனின் ஓவர் ஆக்டிங்கும், சூரியின் சிரிப்பு வராத காமெடியும், ரசிகர்களை தற்கொலை செய்துகொள்ள தூண்டும் அளவுக்கு உள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ள தீப்தி தான் படத்தின் நாயகி. நிலா போல நல்ல வட்டமான அழகான முகம். ஆனால், அந்த முகத்திற்கு ஏற்றவாறு படங்கள் தான் அமையவில்லை அம்மணிக்கு.

ஜெயபிரகாஷ், பிரகாஷ்ராஜ் இரண்டு பேரும் எப்போதும் போல நடித்துள்ளார்கள். வித்தியாசம் என்பது அவர்களுடைய கதாபாத்திரத்திலும் இல்லை நடிப்பிலும் இல்லை.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி சுமார் ரகம் தான்.

பணம் கை மாறுவது, வைரம் கை மாறுவது, தங்கம் கை மாறுவது என்று தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்துவிட்டாலும், அதை அவர் அவர் பாணியில் சொல்லி வெற்றிப் பெறுவதைப் பார்த்த இயக்குநர் வின்சென்ட் செல்வா, இதோ எனது பாணியில் சொல்கிறேன் என்று சொதப்பியிருக்கிறார்.

தனது முதல் படமான 'ப்ரியமுடன்' படத்தை எடுத்த ராஜாஸ்தான் பகுதிகளில், இப்படத்தின் முக்கிய காட்சிகளை ஓடி ஓடி படமாக்கியுள்ள வின்சென்ட் செல்வா, இப்படத்திற்கு 'துள்ளி விளையாடு' என்று தலைப்பு வைத்ததற்கு பதில் 'ஓடி விளையாடு' என்று வைத்திருக்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget