மெய்யழகி சினிமா விமர்சனம்

நடிகர் : பாலாஜி
நடிகை : ஜெய் குஹேனி
இயக்குனர் : ஜெயவேல்

'ஆட்டிச' தம்பிக்கும், அவனுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்து வாழும் அக்காவுக்கும் இடையேயான பாசப்போராட்ட
கதைதான் 'மெய்யழகி'. சின்னப்படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை... சிறந்த கதையம்சம் உடைய படங்களுக்கு தியேட்டர் தருவதில்லை... இதனால் திட்டமிட்டபடி என 20 வருட திரையுலக போராட்டத்தின் வாயிலாக உருவான கருவான திரைப்படம் வெளியாவதில் சிக்கல், விக்கல்... என்றெல்லாம் இப்படம் திரைக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன் இயக்குநர் ஆர்.டி.ஜெயவேல் பேட்டி கொடுத்தார். ஆனாலும் திட்டமிட்டபடி (நவ., 22ம் தேதி) திரைக்கு வந்திருக்கும் 'மெய்யழகி', மெய்யாலுமே அழகியா என்பதை பார்ப்போம்...

கதைப்படி குடிகார அப்பா, அம்மாவை தின்று பிறந்த 'ஆட்டிச' தம்பி. ஆனாலும், வாழை இலை விற்று பிழைத்து குடும்பபாரத்தை சுமந்தாலும், குத்து விளக்காட்டம் ஜொலிக்கும் 'மெய்யழகி' ஜெய்குஹேனி(என்ன பெயரோ, பொருளோ...?) மீது ஊர் பெரிய மனிதரும், பெரும் பணக்காரருமான 'பணம்' எனும் அருண்மொழிவர்மனுக்கு ஒருதலை காதல். ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தை குட்டி என்றிருக்கும் 'பணம்' , மெய்யழகியை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக பண்ணும் தில்லு முள்ளுகளும், தகிடுதித்தங்களும் கண்டு பதறும் மெய்யழகியின் ஆட்டிச தம்பி, அக்காவை 'பணத்'திடமிருந்து புத்திசாலித்தனமாக காப்பாற்றினாரா..? அல்லது தனக்காகவே வாழும் அக்காவை 'பணத்'திற்கு காவு கொடுத்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்! இப்படி ஒரு வித்தியாசமான கதையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதை திரைக்கதையாகவும், கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் என்றால் டி.ஜெயவேல் மேலும் ஜெயித்திருக்கலாம், ஜொலித்திருக்கலாம்.

'ஆட்டிச' சிறுவனாக 'தெய்வா' எனும் கேரக்டரில் பாலாஜி பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்காக தெரிந்தாலும், 'ஆட்டிச' சிறுவர்களை அப்படியே பிரதிபலித்திருப்பதற்காக பாலாஜிக்கு விருதுகள் நிச்சயம்!

பாலாஜியின் அக்காவாக வரும் 'மெய்யழகி' எனும் ஜெய்குஹேனி பெரிய மேனியழகியாக தெரியவில்லை என்றாலும், நல்ல நடிப்பழகியாக மிளிர்ந்திருக்கிறார். ''எச்சில் இலையில் விருந்து வைக்கிறேன் சாப்பிடு... என எப்படி கூசாமல் கேட்கிறீங்க...'' என 'பணத்'தின் மனைவி செளந்தரவள்ளியிடம் அவர் பேசும் வசனங்கள் நச்-டச்!

பாலாஜி, ஜெய்குஹேனி மாதிரியே எல்லன் - அர்ஜூன், குடிகாரதந்தை - ராம்ராஜ், வில்லன் பணமாக வரும் அருண்மொழிவர்மன், செளந்தரவள்ளி, ஜெனிஜாங்மின் உள்ளிட்டோரும் மெய்யழகிக்கு மெய்யாலுமே அழகு சேர்த்திருக்கின்றனர்.

எஸ்.பி.அபிஷேக்கின் இசையும், வெங்கடேஷ் அர்ஜூனின் ஒளிப்பதிவும் அழகான கிராமத்தையும், அதன் பின்னணி சப்தங்களையும் அருமையாக காட்டி நம் காதுகளையும், கண்களையும் குளிர்விக்கின்றன!

''இப்போல்லாம் இளம் பொண்ணுங்களுக்கு எங்களை மாதிரி இளைஞர்களை பிடிப்பதில்லை, 2 பிள்ளை பெத்த தகப்பன்களைதான் பிடிக்குது...'' என 'பணத்'திடம் காமெடி பண்ணும் இயக்குநர் ஜெயவேல், பின்னணியில் 'வில்லு' பட போஸ்டரையும், அதில் நயன்தாரா 'ஸ்டில்'லையும், பிரபுதேவா பெயரையும் காட்டி 'குசும்பு'பண்ணும் இடத்திலும், க்ளைமாக்ஸில், ''எங்கமாமா வந்து அக்காவை கட்டிக்க போறதால, 'பணத்'தை போட்டு தள்ளிட்டு போயிட்டாரு...'' என இல்லாத மாமாவை இருப்பதாக வில்லன் 'பணத்'தின் ரூட்டிலேயே போலீஸ்க்கு போக்கு காட்டு இடத்திலும் இயக்குநர் ஜெயவேல் ஜெயித்திருக்கிறார்.

மற்றபடி 'ஆட்டிச' குழந்தைகளுக்கும் அறிவு உண்டு என சொல்லும் ''மெய்யழகி'' - ''பேரழகி'' அல்ல... 'போர்' அழகியும் அல்ல! 'வசூல்' அழகியா?' என ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget