காஷ்மோரா சினிமா விமர்சனம்

ஆவி, பேய் படங்களிலேயே அல்ட்ரா மார்டன் காமெடி - த்ரில், திகில் படமாக அசத்தலாக வந்திருக்கும் படம், ரவுத்திரம், "இதற்கு தானே ஆசைபட்டாய்
பாலகுமாரா" படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் பேனரில், இந்த தீபாவளிக்கு கார்த்தி நடிக்க வெளிவந்திருக்கும் படம் தான் "காஷ்மோரா".

ஆவிகளின் அரசன், பேய்களை ஓடவிடும் பிதாமகன், ஆவி உலக
சாம்ராட்... எனும் அடைமொழிகளுடன் பிளாக் மேஜிக் பித்தலாட்டம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் "காஷ்மோரா" கார்த்தியும், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும். பேய் இருக்கு என்று சொல்லி பணம் பறிக்கும் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒரு அரசிலங்குமாரியின் சாபத்தால் ஏழு நூற்றாண்டுகளாக, ஆத்மா சாந்தியடையாமல் அலையும் பேய்கள் நிரம்பிய பாழடைந்த அரண்மனைக்குள் தள்ளி காமெடியாக பேய் ஓட்ட வைத்திருக்கிறது காஷ்மோரா படக்கதை மொத்தமும். அரசிலங்குமாரி நயன்தாராவின் உதவியுடன் எழுநூறு, எண்ணூறு ஆண்டுகளாக கர்ஜிக்கும் பேய்களை காஷ்மோரா கார்த்தியும், அவரது ஒட்டுமொத்த குடும்பமும் ஓட்டியதா?, அடிக்கடி தலை வேறு முண்டம் வேறாக கர்ஜிக்கும் பெண், பித்து தளபதி ராஜ்நாயக் பேயும் அவரது சகாக்கள் பேய்களும் காஷ்மோரா கார்த்தி குடும்பத்தை ஒட விட்டதா..? என்பதை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் முழு நீள காமெடியுடன் கூடிய திகிலாகவும், த்ரில்லாகவும் சொல்லியிருக்கிறது "காஷ்மோரா".

"என் காதுல பட்ட ஒரு விஷயம், எங்க கோவில் பாம்பு புத்துல ஊத்துன பாலும் முட்டையும் மாதிரி வெளியில போகவே போகாது" எனும் டயலாக்கில் தொடங்கி, "ஒரு ஆட்டக்காரன் இன்னொரு ஆட்டக்காரன பாராட்டுணும்னு கரகாட்டக்காரன்ல சொல்லி இருக்காங்க... நான் பாராட்டிட்டேன் கதவை தொறந்து விட்டுட்டீங்கண்ணா., ஒடிடுவேன்.." என்பது வரை காஷ்மோரா கார்த்தி கவர்ந்திழுக்கிறார் என்றால்,

ராஜ்நாயக்கின் பலவீனம் பெண்கள் தான், பல பெண்களுக்கு ராஜ்நாயக் என்றால் பலவீனம்... எனும் பின்னணி டயலாக்குடன் ப்ளாஷ்பேக்கில் வரும் படைத்தளபதி ராஜ்நாயக் கார்த்தி, "வேண்டியதை கேள்" எனும் அரசனிடம்., அவரது பெண்ணையே கேட்டு வீரம் காட்டுவது, நாம் போரில் ராஜ்ஜியம் பிடித்திருக்கும் இந்த நாட்டு மன்னனுக்கு 27-மனைவிகள், 30-காதலிகள் அவர்களை தனித்தனியா அனுப்பட்டுமா..? எனும் போர் வீரனிடம், வானத்தில் உள்ள நட்சத்திரங்களை யெல்லாம் மொத்தமாக பார்த்தால் தான் அழகு, அவர்களை மொத்தமா அனுப்பு... என்பதும், அவர்களுடன் சேர்த்து இவர்களையும் அனுப்பு என பணிப்பெண்களைப் பார்த்து சொல்லிவிட்டு, பணிப் பெண்கள் என்றாலும் அவர்களும் பெண்கள் தானே... என்பதும் சிலை என்றாலும் பெண் சிலை ஆயிற்றே ... என நயனின் சிலையை முகர்வதும் , நுகர்வதும் தியேட்டரில் க்ளாப்ஸை கிளப்புகிறது . ராஜ்நாயக் இருக்கும் இடத்தில் வார்த்தையையும் வாளையும் கவனமாக கையாள வேண்டும்... எனும் டயலாக்கில் கம்பீரம் கொப்பளிக்கிறது.

மொட்டைத் தலை மற்றும் தாடியுடன் கூடிய ராஜ்நாயக், காஷ்மோரா கார்த்தி இருவரையும் காட்டிலும் ராஜ்நாயக்கின் மொட்டை தலை வேறு, முண்டம் வேறாக அடிக்கடி ஸ்டைலாக திரிந்து பயமுறுத்தியபடி "நம்பிக்கை எனும் வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.... என்றபடியும், "இன்னொரு ஓட்டம்....உன் உயிர் ஓட்டம் நின்று விடும்..." என்று மிரட்டியபடியும் கர்ஜிக்கும் கார்த்தி., காஷ்மோராவின் மணிமகுடம்.

தன் கண் முன்னே காதலனையும், அரசனான அப்பாவையும், இளவரசு தம்பியையும் இழந்த இளவரசி - ரத்னமஹாதேவியாக நயன்தாரா. அடி சறுக்குகிறதா.? ராஜநாயக்.? எனக் கேட்டபடி அரியணையில் அமர்ந்து கொண்டு பதிலடி கொடுக்கும் இடம் பலே, பலே. ராஜ்நாயக்கின் வக்கிற புத்திக்கு பழிக்கு பழியாக கூந்தலில் ஆலகால விஷத்தை படற விட்டு ராஜ்நாயக் கைகொன்று இந்தப் பிறவியல்ல.... எந்தப் பிறவி, எத்தனைப் பிறவி எடுத்தாலும், உனது முற்றுப்புள்ளி நான் தான் என்று சூளுரைத்து சாகிறார் நயன். வாவ், நயனிடம் என்ன ஒரு நடிப்பு.? ஆனால், நயனுக்கு முகத்திலும், நடிப்பிலும் இருக்கும் வசீகரம், அவரது தோற்றத்தில் இல்லாததும், வயோதிகம் தெரிவதும் பலவீனம்.

ஸ்ரீதிவ்யா., இன்னொரு நாயகியாக இளமையாக நயனுக்கு ஈக்குவலாக ஜொலிக்கிறார். தன் பரம்பரைக்கே தான், தான் மூத்த பெண் வாரிசு ... என்றபடி வசமாக பேய் பங்களாவில் சிக்கும் ஸ்ரீ., பிரமாதம். "ஆவியும் அது சார்ந்த பித்தலாட்டமும் வணிகமும் எனும் டைட்டிலில் ஆராய்ச்சி பண்ண களமிறங்கும் ஸ்ரீதிவ்யா, ஆவியும் அது சார்ந்த சேவையும் என ஹிப்பனாடிசம் மற்றும் பிளாக் மேஜிக் மூலம் மக்களை ஏமாற்றும் கார்த்தியை.... மாட்டிவிட துடிப்பது எல்லாம் கச்சிதம்.

"காஷ்மோராவின் தாத்தா குட்டி சாத்தானுக்கு குட்டி கதை சொல்லி வீட்டு வாசல்லேயே கட்டிப்போட்டாரு...." எனும் பாட்டி கேரக்டரில் இருந்து., யாரும் எதையும் தெரியாம பண்றதில்லை ராஜேஷு... என்றபடி வில்லன், நம்பிக்கை துரோகம் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருத்தரது குடும்பத்தை அழிக்கும் வில்லன சரத் லோகித் வாலா வரை ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம்.

அன்பறிவின் உயரே உயரே பறக்கும் சண்டை பயிற்சியில் தியேட்டர் அதிர்கிறது. கலை இயக்குனர் ராஜ்ஜீவனின், சரித்திர கால செட்டுகள், அரண்மனை, பாழடைந்த அரண்மனை அத்தனையும் பிரமாண்டம் பிரமாதம். ஒம் பிரகாஷின் ஓவிய ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம், சந்தோஷ் நாராயணனின் இசையில், "திக்கு திக்கு சார்... பக்கு பக்கு சார்..", "தகிட தகிட தைதாராரோ...." "ஓயா, ஓயா.." பாடல்களும், பின்னணி இசையும் கூட படத்திற்கு பலமே..

கோகுலின் எழுத்து, இயக்கத்தில் "தீய காற்று தூய தீபத்தை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது", "எந்த ஒரு வில்லுக்கும் பொருத்தமான ஒரு அம்பு தேவை...", "உச்சி வெயில்ல நம்ம நிழலே நமக்குத் தெரியாது...", "என்னைக்கு கோயிலுக்குள்ள கேமிராவும், எலக்ட்ரிக் டிரம்மும் வந்து சேர்ந்ததோ அன்றைக்கே சாமிங்கள்ளாம் கோயில விட்டு கிளம்பி வாக்கிங் போயிடுச்சு..." என்பது உள்ளிட்ட டயலாக்குகளும், நெருப்பு நாய், தலை வேறு முண்டம் வேறாக வந்து தன் தலையை தானே பொறுத்திக் கொள்ளும் ராஜ்நாயக் பேய், இன்னும் விதவிதமான கிராபிக்ஸ், சிஜி மாயாஜாலங்கள் மற்றும் மிரட்டும் ராஜ்நாயக்கின் போர்த் திறனும், அடங்கா பெண் ஆசையும், பிளாஷ்பேக் அரசவை அரண்மனை காட்சிகளும் அவைகாட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் எல்லாம் பக்காவாக இருக்கிறது .
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget