விஜய்யின் வேலாயுதம் பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய ஹிட்டாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வெளியான விஜய்யின் எந்தப் படத்தைவிடவும் வேலாயுதத்தின் ஓபனிங் மிகப் பிரமாதம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விஜய்யின் மாஸ் வேல்யூவை இப்படம் உறுதி செய்திருப்பதால் மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய்.
வேலாயுதம் வெற்றிக்குப் பிறகு மீடியாவை சந்திப்பது மகிழ்ச்சியா இருக்கு என்ற பூரிப்பான பேச்சுடன் உரையாடலை தொடங்கினார் விஜய்.
என்னுடைய 52 படங்களில் வேலாயுதம்தான் பெஸ்டுன்னு எல்லோரும் சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்கு. தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் இந்தப் படம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. இப்போதான் அவரை சந்திச்சிட்டு வர்றேன். ஹேப்பியா சார்னு கேட்டேன். கவலையே இல்லை, படம் சூப்பர்ஹிட். இனி நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்.
நீங்க எம்ஜிஆர் பாணியில் நடிச்ச படம் இதுதானே?
எம்ஜிஆர் பாணியில் நடிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? அது தப்பும் கிடையாது. எம்ஜிஆர் பாணியில் படம் பண்ணுறது ரொம்ப கஷ்டம். முதல்ல நல்ல கதை வேணும். அது வேலாயுதம் படத்தில் இருக்கு.
நடிக்க வந்த புதிதில் ரஜினி பாணியில் நடிப்பதா சொன்னீங்க?
எம்ஜிஆர், ரஜினி ரெண்டு பேரின் பாணியுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதை நான் மறுக்கலை.
படத்தோட இசை...?
பாடல்கள் எல்லாமே ஹிட். ரொம்ப முக்கியமா விஜய் ஆண்டனியோட ரீரெக்கார்டிங். அது படத்துக்கு பெரிய பலம். இந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு நன்றி சொல்லணும். அவரும் இந்தப் படத்தோட கதை விவாதத்துல பங்கேற்றார். அப்புறம் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் சார். அவரும் பல ஆலோசனைகள் தந்தார். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏன் எதுக்குன்னு கேட்காம கேட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இப்படியொரு அருமையான வெற்றியை தந்த இயக்குனர் ராஜாவுக்கு என்னோட நன்றி.