கமல்ஹாசனை தொடர்ந்து டைரக்டர் பாரதிராஜாவும் இப்போது ஹாலிவுட்டில் கால்பதிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள், சிவப்பு ரோஜாக்கள், முதல்மரியாதை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் இயக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையர் பலரை அறிமுகப்படுத்திய
பெருமை இவருக்கு உண்டு. காலத்திற்கு ஏற்றவாறு படத்திலும் புதுப்புது புதுமைகளை கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு.
கடைசியாக தமிழில் இவர் இயக்கிய படம் பொம்மலாட்டம். நானா படேகர், அர்ஜூன், காஜல் அகர்வால், ருக்மணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் அனைவராலும் பாராட்டு பெற்றது. இப்போது இந்தபடத்தை தான் பாரதிராஜா ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்கிறார். தனது வெளிநாட்டு நண்பர்கள் உதவியுடன் இப்படத்தை இயக்க உள்ளார் பாரதிராஜா. மேலும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சனை நடிக்க வைக்க தனது வெளிநாட்டு நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாரதிராஜா, அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை முடித்த பின்னர் பொம்மலாட்டம் படத்தை ஹாலிவுட்டில் இயக்குவார் எனத் தெரிகிறது. மேலும் இப்படம் பற்றிய முழு அறிவிப்பையும் பாரதிராஜா விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.